அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு பாஜ ஐடி பிரிவு தலைவர் மீது கமிஷனரிடம் திமுக புகார்

மதுரை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்துஅவதூறு பரப்பிய பாஜ ஐடி பிரிவு தேசிய தலைவர் அமித் மாளவியா மீது போலீஸ் கமிஷனரிடம் திமுக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. திமுக வழக்கறிஞர் பிரிவு மதுரை மாவட்ட அமைப்பாளர் தேவசேனன், மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்துள்ள புகார் மனு: பாஜவின் ஐடி பிரிவு தேசியத் தலைவர் அமித் மாளவியா, தனது டிவிட்டர் பக்கத்தில் நாட்டில் 80 சதவீதம் மக்கள் சனாதன தர்மத்தை பின்பற்றுகின்றனர் எனக்கூறி, வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவுக்கு முன்பாக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தேனாம்பேட்டை, காமராஜர் அரங்கத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது, ‘சனாதன தர்மம் என்பது கொரோனா, டெங்கு, மலேரியா போன்று ஒழிக்கப்பட வேண்டிய ஒரு சமூகக் கேடு’ என பேசியிருந்தார். அதன்பின் தான், அமித் மாளவியா அவரது வீடியோவை பதிவிட்டுள்ளதாக நான் கருதுகிறேன்.

அமித் மாளவியாவின் பதிவை தொடர்ந்து, அதற்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் மக்களை பிளவுபடுத்தும் கொள்கை எனவும், சனாதன தர்மத்தை வேரோடு பிடுங்கி எறிவது மனித நேயத்தையும், மனித சமத்துவத்தையும் நிலைநிறுத்தும் எனவும் குறிப்பிட்டு, விரிவான டிவிட் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த டிவிட் பதிவிடப்பட்ட பிறகும், அமித் மாளவியா தனது கருத்தில் இருந்து பின்வாங்கவோ அல்லது மன்னிப்பு கேட்கவோ முன்வரவில்லை. இது, அவர் சமூகத்தில் வெறுப்புணர்வை தூண்டுவதற்காக செய்யும் நோக்கத்தையே கொண்டுள்ளது. இது தொடர்பான இணைய இணைப்பை (யூஆர்எல் லிங்க்) இணைத்துள்ளேன். பொது மக்களிடையே வெறுப்பையும், வகுப்புவாதத்தையும் தூண்டும் விதமாக நடந்து கொண்ட அமித் மாளவியா மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Related posts

மதுரை, கோவை மெட்ரோ ரயில் வழித்தடங்களில் ஆசிய முதலீட்டு வங்கியின் பிரதிநிதிகள் நாளை நேரில் ஆய்வு : ரூ.22,108 கோடி முதலீடு செய்ய திட்டம்

நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு தேவை: மக்களவையில் அகிலேஷ் யாதவ் பேச்சு

விநாயகர் சிலை அகற்றப்பட்டதை எதிர்த்து போராட்டம்..!!