ஈரோடு வஉசி மைதானத்தில் ₹7.57 கோடியில் புதுப்பிக்கப்பட்ட சிந்தடிக் ஓடுதளம்: அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார்

ஈரோடு: ஈரோடு வஉசி மைதானத்தில் ரூ.7.57 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்ட சிந்தடிக் ஓடுதளத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு திட்டங்களை தொடங்கி வைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார். ஈரோடு சோலாரில் உள்ள ஈரோடு நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் அலுவலகத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காலை திறந்து வைத்தார்.

இதைத்தொடர்ந்து தொகுதி மக்களின் கோரிக்கைகள், குறைகள் குறித்து தெரிவிக்கும் வகையில் ஆன்லைன் சேவையை தொடங்கி வைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். பின்னர் தூய்மை பணியாளர்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சு.முத்துசாமி, மு.பெ.சாமிநாதன், அன்பில்மகேஷ் பொய்யாமொழி, கயல்விழி செல்வராஜ், மதிவேந்தன், எம்பி அந்தியூர் செல்வராஜ், எம்எல்ஏக்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், அந்தியூர் வெங்கடாச்சலம், மாவட்டச் செயலாளர்கள் நல்லசிவம், பத்மநாதன், மதுரா செந்தில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதைதொடந்து ஈரோடு வஉசி மைதானம் வந்தடைந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ரூ.7 கோடியே 57 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட சிந்தடிக் ஓடுதளத்தை திறந்து வைத்தார். பின்னர் ஈரோடு அடுத்துள்ள ஆர்என் புதூரில் உள்ள பிளாட்டினம் மகாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 22 பயனாளிகளுக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். மேலும் வருவாய்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை, கூட்டுறவுத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மகளிர் திட்டம், தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுதுறை, தோட்டக்கலைத்துறை, முன்னோடி வங்கி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 55 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அங்கிருந்து சித்தோட்டில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிக்கு சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அங்கு நான் முதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்ட பயனாளிகளுடன் கலந்துரையாடினார். இன்று மாலையில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அலுவலர்களுடன் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அரசு திட்டப்பணிகள் முன்னேற்றம் குறித்தும், செயல்படுத்தப்பட வேண்டிய திட்டங்கள் குறித்தும் துறை வாரியாக ஆய்வு மேற்கொள்கிறார். அரசு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இன்று மாலை 6 மணிக்கு பெருந்துறை சாலையில் உள்ள மேட்டுக்கடை பகுதியில் திமுக இளைஞரணி மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார். கூட்டத்தை முடித்துக்கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று இரவு கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.

Related posts

கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு செப் 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

மனைவி ஆர்த்தி உடனான திருமண வாழ்வில் இருந்து விலகுவதாக நடிகர் ஜெயம் ரவி அறிவிப்பு