அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு முன்னேற்பாடு பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

திண்டுக்கல்: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் தலைமையில் இன்று (05.08.2024) ஆணையர் அலுவலகக் கூட்ட அரங்கில் பழனியில் நடைபெறவுள்ள அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டு முன்னேற்பாடு பணிகள் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள செயற்பாட்டுக் குழுக்களின் பணிகள், விழா முதன்மை அரங்கம் உள்ளிட்ட அரங்கங்களின் கட்டமைப்பு வசதிகள், புகைப்பட கண்காட்சி, இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள், விழா அழைப்பிதழ் வழங்கும் பணிகள், இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து மாநாட்டிற்கு வருகைதரும் முருக பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கான தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து வசதிகள், மருத்துவம் மற்றும் சுகாதார ஏற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், விழா மலர் மற்றும் ஆய்வுக் கட்டுரை மலர் தயாரிக்கும் பணிகள், 15 முருகனடியார்கள் பெயரில் வழங்கப்படும் விருதுகளுக்கான தேர்வு பணிகள் உள்ளிட்ட பணிகள் குறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் விரிவான ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார்.

நிறைவாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேசுகையில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு தொடர்பாக 11 ஆய்வுக் கூட்டங்களும், 3 முறை பழனிக்கு நேரில் சென்று களஆய்வும் செய்து பணிகளை விரைவுப்படுத்தியுள்ளோம். இம்மாநாட்டிற்கு இந்தியா மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஆன்மிகப் பெரியோர்கள், முருக பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள மிகுந்த ஆர்வம் தெரிவித்துள்ளனர். அறுபடை வீடுகளின் அரங்கம், புகைப்பட கண்காட்சி, 3டி தொழில்நுட்பத்துடன் கூடிய காட்சியரங்கம் போன்றவை அனைவரின் கவனத்தையும் ஈர்த்திடும் வகையிலும், இம்மாநாடு குறித்த நினைவுகள் அவர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடிக்கும் வகையிலும் அமைந்திட வேண்டும். இம்மாநாடு எல்லா வகையிலும் சிறப்பாக அமைந்திடும் வகையில் அனைத்து அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட பணிகளில் சிறப்பு கவனம் செலுத்தி ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என். ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் டாக்டர் இரா.சுகுமார், ந.திருமகள், சி.ஹரிப்ரியா, மா.கவிதா, தலைமைப் பொறியாளர் பி.பெரியசாமி, மாவட்ட வருவாய் அலவலர்கள் சு.ஜானகி, தி.சுப்பையா, கண்காணிப்பு பொறியாளர் (தலைமையிடம்) ச.செல்வராஜ், இணை ஆணையர்கள் ச.இலட்சுமணன், பொ.ஜெயராமன், கோ.செ.மங்கையர்க்கரசி, இரா.வான்மதி, கி.ரேணுகாதேவி, ஜ.முல்லை, துணை ஆணையர்கள் இரா.ஹரிஹரன், சி.நித்யா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு