சாமுண்டீஸ்வரி அம்மாள் அறக்கட்டளை சார்பில் புதிய மருத்துவ மையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் இன்று (06.03.2024) சென்னை, மண்ணடி, தம்புசெட்டி தெருவில், கந்தகோட்டம் அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயிலுடன் இணைந்த சாமுண்டீஸ்வரி அம்மாள் அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய மருத்துவ மையத்தினை திறந்து வைத்து, மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி உடல் நலம் குன்றியவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை பார்வையிட்டார்.

பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தருகின்ற திருக்கோயில்களில் மருத்துவ மையங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் 2021 ஆம் ஆண்டில் பழநி, திருச்செந்தூர் உட்பட 10 திருக்கோயில்களிலும், 2022 ஆம் ஆண்டில் 5 திருக்கோயில்களிலும் மருத்துவ மையங்கள் தொடங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக 2023 – 2024 ஆம் ஆண்டு சட்டமன்ற அறிவிப்பின்படி சென்னை, தம்பு செட்டி தெருவில் கந்தகோட்டம் அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயிலுடன் இணைந்த திருமதி சாமுண்டீஸ்வரி அம்மாள் அறக்கட்டளை சார்பிலும் மற்றும் கோவை மாவட்டம், ஆனைமலை, அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில் சார்பில் என 2 மருத்துவ மையங்கள் இன்று திறக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற பிறகு மருத்துவ பணியும் இறை பணி தான் என்பதற்கேற்ப இதுவரை 17 மருத்துவ மையங்கள் திறக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்திருக்கின்றன. இதுவரை இம்மருத்துவ மையங்களில் அவசர சிகிச்சை மற்றும் முதலுதவி அளித்த வகையில் 4.5 லட்சம் நபர்கள் பயன்பெற்றுள்ளனர். கந்தக்கோட்டம் திருக்கோயில் சார்பில் தொடங்கப்பட்டுள்ள இம்மருத்துவ மைய இடமானது திருமதி சாமுண்டீஸ்வரி அம்மாள் அவர்கள் திருக்கோயிலுக்கு உயிலாக எழுதி தந்த 2,652 சதுரடி இடத்தில் கடந்த 03.03.1980 அன்று மருத்துவமனை அமைக்கப்பட்டு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

பின்னர், இந்த இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இன்றைக்கு கோயில்களை பாதுகாப்போம் கோயில் சொத்துக்களை பாதுகாப்போம் என்று சொல்லுகின்ற பாரதிய ஜனதா கட்சி சார்ந்தவர் தான் இந்த இடத்தையும் ஆக்கிரமிப்பு செய்து, 14 அறைகளை வழக்கறிஞர்களுக்கு வாடகைக்கு விட்டிருந்தார். சட்டப்படி நீதிமன்றத்தை நாடி இந்த இடத்தை மீட்டுள்ளோம். இந்த இடத்தில்தான் தற்போது மருத்துவ மையம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த அரசு பொறுப்பேற்றபின், இதுவரையில் 1,462 திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. மாநில அளவிலான வல்லுநர் குழுவால் சுமார் 8,500 திருக்கோயில்களுக்கு திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருக்கோயில்களுக்கு சொந்தமான ரூ.5,950 கோடி மதிப்பிலான 6,800 ஏக்கர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. மேலும், 1,62,107 ஏக்கர் திருக்கோயில் நிலங்கள் ரோவர் கருவியின் மூலம் அளவீடு செய்யப்பட்டு பாதுகாக்கப்பட்டுள்ளன.

பட்டா மற்றும் கணினி சிட்டாக்களில் தவறுதலான பதிவுகள் கண்டறியப்பட்டு மாவட்ட வருவாய் அலுவலர்களிடம் மேல் மறையீட்டு செய்யப்பட்டு 8,638 ஏக்கர் நிலங்கள் திருத்தம் செய்யப்பட்டு திருக்கோயில்கள் பெயரில் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் கீழ் 15 திருக்கோயில்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் ரூ.1,367 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த ஆட்சி ஏற்பட்டு மூன்று ஆண்டுகள் முடிவடைவதற்குள்ளாக சுமார் 18,400 திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பக்தர்களின் நலனுக்காக இது போன்ற அறப்பணிகள் தொடரும்.

மூத்த குடிமக்கள் 1,000 நபர்களை 5 கட்டமாக அறுபடை வீடுகளுக்கு அழைத்து செல்லும் ஆன்மிகப் பயணத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு இருக்கின்றது. இத்திட்டமானது முதலமைச்சர் அவர்களின் சிந்தையில் உருவான திட்டமாகும். இத்திட்டத்திற்காக அரசு ரூ.1.58 கோடி நிதி வழங்கியுள்ளது. முதல் கட்டத்தில் 207 மூத்த குடிமக்களும், அழைத்துச் செல்லப்பட்டனர். இரண்டாம் கட்ட பயணம் இன்று பழனியில் தொடங்கியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா ராஜன், மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ.முரளீதரன், சென்னை மண்டல இணை ஆணையர் ஜ. முல்லை, உதவி ஆணையர் (பொறுப்பு) சி. நித்யா, பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலக் குழுத் தலைவர் பி ஸ்ரீராமுலு, மாமன்ற உறுப்பினர்கள், திருக்கோயில் செயல் அலுவலர் ஆ.குமரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை