அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் 20ம் தேதி ஆஜராக சம்மன்: அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் வரும் 20ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை நேற்று மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. கரூர் ராமேஸ்வரப்பட்டியை சேர்ந்தவர் அசோக் குமார். அமைச்சர் செந்தில்பாலாஜியின் தம்பி. அரசு ஒப்பந்ததாரரான இவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் கடந்த 13ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, கரூர் ராமேஸ்வரப்பட்டியில் உள்ள அசோக் குமார் வீடு, சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள பிஷப் கார்டன் பகுதியில் உள்ள வீடு, நண்பர்கள் வீடுகள் என 11 இடங்களில் சோதனை நடத்தினர்.

18 மணி நேரம் சோதனை முடிவில் கரூரில் உள்ள அசோக்குமாரின் அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இந்நிலையில், வழக்கு தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் நேற்று அரசு ஒப்பந்ததாரரான அசோக்குமாருக்கு சம்மன் ஒன்று அனுப்பியுள்ளனர். அதில், வரும் 20ம்தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்திற்கு நேரில் வர வேண்டும் என்றும், வரும் போது, வழக்கு தொடர்பான ஆவணங்களையும் கையில் கொண்டு வர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது. அதேநேரம், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வழக்கத்திற்கு மாறாக இன்ஸ்பெக்டர் ஒருவர் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

ரூ.27 கோடி லஞ்சம்: முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது வழக்குப்பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு