அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவல் நீட்டிப்பு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை, ஜூலை 12ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் ஜூன் 14ம் தேதி அதிகாலை, அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். உடல் நலக் குறைவு காரணமாக அவர், ஓமந்தூரார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்றைய தினம் பிற்பகல், மருத்துவமனைக்குச் சென்ற சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை நேரில் பார்வையிட்டு, அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செந்தில் பாலாஜிக்கு, இதய அறுவை சிகிச்சை நடத்தப்பட்டது.
இந்நிலையில் அவரது நீதிமன்ற காவல் நேற்று முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, காவேரி மருத்துவமனையில் இருந்து காணொலி காட்சி மூலம் செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம், எப்படி இருக்கிறீர்கள் என நீதிபதி அல்லி கேள்வி எழுப்பினார்.

அதற்கு வலி இருப்பதாக செந்தில் பாலாஜி பதிலளித்தார். இதைத்தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 12ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதற்கிடையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியில் நீடிக்க தடை விதிக்க கோரி புதுக்கோட்டையைச் சேர்ந்த சண்முகசுந்தரம், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர், இதுதொடர்பான மற்றொரு மனு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளதால், இந்த மனுவையும் சேர்த்து சென்னை ஐகோர்ட்டின் முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.

Related posts

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி

ஜூலை-04: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை