அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் கைது: அமலாக்கத்துறையினர் அதிரடி

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் கொச்சியில் அசோக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர். பல முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் அசோக்குமாரை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.

அமைச்சர் செந்தில்பாலாஜி, போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றியதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம், செந்தில் பாலாஜி உள்ளிட்ட பலர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து, அமலாக்கத்துறையினர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோர் சம்பந்தமான இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்தனர்.

தற்பொழுது செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதால் புழல் சிறை உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், கரூரில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் சோதனை நடத்தியது.

கரூர் ராம்நகரில் உள்ள கட்டுமான பணி நடைபெற்று வரும் அசோக்குமாரின் புதிய வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். அந்த நோட்டீஸில் அசோக்குமாரின் மனைவி நிர்மலா பெயரை குறிப்பிட்டு ஒட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, கரூர் புறவழிச் சாலையில் கட்டி வரும் புதிய பங்களா குறித்த ஆவணங்களுடன் உரிமையாளர் நேரில் ஆஜராக, அசோக்குமாரின் மனைவிக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, அசோக்குமாரின் மனைவி நிர்மலா புதியதாக கட்டி வரும் வீட்டை அமலாக்கத்துறை முடக்கியது.

மேலும், இந்த வழக்கில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் நேரில் விசாரணைக்கு வர வேண்டும் என அமலாக்கத்துறை இதுவரை 4 முறை சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. இதனால் அவரை தேடும் பணி அமலாக்கத்துறையால் தீவிரப்படுத்தப்பட்டது.

மேலும் வரும் 27ம் தேதிக்குள் அவர் நேரில் ஆஜாரவில்லை என்றால் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது என கூறப்பட்டது. இந்நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை, சென்னையில் இருந்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் கொச்சியில் வைத்து கைது செய்துள்ளனர்.

அவரை இன்று மாலை சென்னைக்கு அழைத்து வந்து நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 4 முறை அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: நாளை மறுநாள் பிரசாரம் ஓய்வு: அமைச்சர் உதயநிதி 2 நாள் பிரசாரம்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு