காரை கொஞ்சம் நகர்த்த சொன்ன நடிகரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய அமைச்சரின் பிஎஸ்ஓ: கோவா போலீஸ் விசாரணை

பனாஜி: கோவாவில் காரை கொஞ்சம் நகர்த்த சொன்ன நடிகரிடம் துப்பாக்கியை காட்டி மிரட்டிய அமைச்சரின் பிஎஸ்ஓ-விடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவாவைச் சேர்ந்த நடிகர் கவுரவ் பக்ஷி, கட்டுமான உரிமம் தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக ரெவோரா பஞ்சாயத்து அலுவலகத்திற்கு சென்றார். அவரது காரை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்த முயன்றார். ஆனால் போக்குவரத்துக்கு இடையூறாக கோவா மீன்வளத்துறை அமைச்சர் நீலகாந்த் ஹலர்ன்கரின் கார் நின்றது. அந்த காரை அப்புறப்படுத்துமாறு அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரியிடம் (பிஎஸ்ஓ) கோரிக்கை விடுத்தார். ஆனால் அவர் அமைச்சரின் காரை அப்புறப்படுத்த மறுத்துவிட்டார். அதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் நடந்த போது அமைச்சர் காருக்குள் இருந்துள்ளார்.

பின்னர் இரு தரப்பினரும் அங்கிருந்து கிளம்பி விட்டனர். இதுகுறித்து கொல்வலே காவல் நிலையத்தில் அமைச்சர் தரப்பிலும், நடிகர் தரப்பிலும் தனித்தனியாக புகார்கள் அளிக்கப்பட்டன. இவ்விவகாரம் ெதாடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து கவுரவ் பக்ஷி கூறுகையில், ‘எனது காரில் இருந்து இறங்கிச் சென்று, அமைச்சரின் காரை கொஞ்சம் நகர்த்துமாறு டிரைவரிடம் கேட்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். மாறாக அமைச்சரின் காருக்குள் இருந்த பிஎஸ்ஓ, எனது காரை அங்கிருந்து நகர்த்தாவிட்டால் என்னை அடிப்பேன் என்று கூறினார். ஒருகட்டத்தில் தனது துப்பாக்கியை எடுத்து காட்டி அச்சுறுத்தினார். அதனால் நான் எனது செல்போன் மூலம் மிரட்டுவதை வீடியோ எடுத்தேன். அதனையும் போலீசில் ஒப்படைப்பேன்’ என்றார். அமைச்சரின் பிஎஸ்ஓவுக்கும், நடிகருக்கும் ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

Related posts

தமிழ்நாடு காவல்துறையில் இருந்து இன்று பணி ஓய்வு பெறும் காவல் அதிகாரிகளுக்கு பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார் காவல் ஆணையர்

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு பகுதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் நாளை பயணம்

மேற்குவங்க மாநில தலைவர் பதவி தற்காலிகமாகிவிட்டது: கார்கேவை விமர்சித்த ஆதிர் ரஞ்சன் சவுத்ரி