பத்திரப்பதிவு முடிந்த நாளிலேயே பொதுமக்களுக்கு ஆவணங்களை உடனடியாக வழங்க வேண்டும்: அமைச்சர் மூர்த்தி அறிவுறுத்தல்

சென்னை: சென்னை நந்தனம், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அலுவலக வளாக கூட்டரங்கில் நேற்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில் அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்கள், மாவட்ட பதிவாளர்கள் (நிர்வாகம்) மற்றும் (தணிக்கை), மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரை), தனித்துணை ஆட்சியர் (முத்திரை) மற்றும் உதவி செயற்பொறியாளர்களின் பணித்திறன் மற்றும் வருவாய் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.

அனைத்து துணைப்பதிவுத்துறை தலைவர்கள் நிர்ணயிக்கப்பட்ட வருவாயை அடையவும், அரசின் வருவாயை கூட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அமைச்சர் அறிவுறுத்தினார். சார்பதிவகங்களில் ஆவணப்பதிவுக்கு வரும் பொதுமக்களுக்கு ஆவணப் பதிவு முடித்து எந்தவித குறைபாடும் இல்லாத ஆவணங்களை பதிவு நாளன்றே திரும்ப அளிக்க அறிவுறுத்தப்பட்டது. சார்பதிவாளர்களால் பரிசீலனை மற்றும் இதர காரணங்களுக்காக நிலுவை வைக்கப்பட்ட ஆவணங்கள் சீராய்வு செய்யப்பட்டதில் நிலுவை எண்ணிக்கையை கணிசமான அளவில் குறைத்திட அறிவுறுத்தப்பட்டது.

மேலும் சார்பதிவகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகளான வில்லங்கச் சான்று வழங்குதல், சான்றிட்ட நகல்கள் வழங்குதல் ஆகியவற்றை குறித்த காலத்திற்குள் பொதுமக்களை அலைக்கழிக்காமல் வழங்க அறிவுறுத்தப்பட்டது. இதுகுறித்து துணைப் பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் நிர்வாக மாவட்ட பதிவாளர்கள் தொடர் கண்காணிப்பு மேற்கொண்டு இதில் சுணக்கம் ஏற்படாமல் சேவை வழங்குவதை உறுதி செய்துகொள்ள அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் வணிகவரித்துறை ஆணையர் ஜகந்நாதன், பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் பதிவுத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

டெல்லியில் பிரதமர் மோடி உடன் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு சந்திப்பு

மக்கள் பணி, கட்சிப் பணியை தொய்வின்றி தொடர்வோம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவு

ஒவ்வொரு மாதமும் அதிகபட்சமாள மின்னணு பண பரிவர்த்தனை மூலம் பயணச் சீட்டு வழங்கும் அரசு பஸ் கண்டக்டர்களுக்கு பரிசு