கொற்றலை ஆற்றில் எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணி 6 நாட்களில் நிறைவுபெறும் : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை : கொற்றலை ஆற்றில் எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணி 6 நாட்களில் நிறைவுபெறும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எண்ணூர் முகத்துவார பகுதியில் எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணிகளை கொட்டும் மழையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, எண்ணெய் அகற்றும் பணிக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்து வருவதாக கூறினார். இதனிடையே ஆய்வு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,”மிக்ஜாம் புயல் – வரலாறு காணாத கனமழையைத் தொடர்ந்து, எண்ணூர் முகத்துவாரப் பகுதிகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது. இந்நிலையில், அந்த கச்சா எண்ணெய்க் கழிவுகளை அப்புறப்படுத்தும் பணிகளை இன்றைய தினம் நேரில் ஆய்வு செய்தோம்.

முழுக்க முழுக்க எந்திரங்களின் துணையோடு எண்ணெய்க் கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. ஐ.ஐ.டி – அண்ணா பல்கலைக்கழகம் போன்ற உயர்கல்வி நிறுவனங்களின் துணையோடு நவீன தொழில்நுட்பங்கள் மூலம் முழு பாதிப்பும் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், மேலும் எண்ணெய் கழிவுகள் புகாமல் தடுப்பதற்கு மிதவைகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்த நிகழ்வின் போது, எண்ணூர் முகத்துவாரத்தை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் – மீனவர்களின் கோரிக்கைகளை பெற்றோம். கழக அரசு நிச்சயம் அவர்களுக்கான இழப்பீட்டை வழங்கும் என்றும், இனியும் இதுமாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தோம்,”என்று தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து உதயநிதி வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில்,”கனமழையின் போது சென்னை மணலியில் உள்ள CPCL எண்ணெய் சுத்திகரிப்பு மையத்திலிருந்து ஏற்பட்ட எண்ணெய் கசிவினை அகற்றும் பணிகளை எண்ணூர் நெட்டுக்குப்பம் முகத்துவாரப் பகுதியில் இன்று ஆய்வு செய்தோம். இந்தப் பணிகளை ஒருங்கிணைத்து வரும் தமிழ்நாடு அரசின் எண்ணெய் கசிவு மேலாண்மை ஒருங்கிணைப்பு மையத்திற்கு சென்று, கழிவுகளை சுத்தம் செய்யும் பணிகளின் நிலவரத்தைக் கேட்டறிந்தோம். எண்ணெய் கழிவால் படகு – மீன்பிடி வலை உள்ளிட்டவை சேதமடைந்துள்ளதாக அப்பகுதி மீனவர்கள் நம்மிடம் கூறினர். அவர்களுக்கு துணைநிற்கிற வகையில் கழக அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று எடுத்துக் கூறினோம்.”எனத் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் ஒரு பதிவில்,”புயல் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட, திருவொற்றியூர் தொகுதிக்குட்பட்ட எர்ணாவூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் இன்று ஆய்வு செய்தோம். அங்குள்ள தெருக்கள் – வீடுகளுக்கு சென்று வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பொதுமக்களிடம் நேரடியாக கேட்டறிந்தோம். மேலும், அவர்களுக்கு துணை நிற்கின்ற விதமாக, அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று உறுதியளித்தோம்.”இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related posts

ரயில் தண்டவாளத்தில் தீயணைக்கும் கருவி

பெண் மருத்துவர் பலாத்கார கொலை விவகாரம் மே.வங்கத்தில் மருத்துவர்கள் மீண்டும் போராட்டம்: மருத்துவ சேவைகள் பாதிப்பு

ஏழுமலையான் கோயிலில் மகள்களுடன் பவன் கல்யாண் சாமி தரிசனம்: நம்பிக்கை உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டார்