அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில் தவறான தகவலளித்த பிடிஓ சஸ்பெண்ட்: பணிக்கு தாமதமாக வந்த மூவர் பணியிட மாற்றம்

சிவகங்கை: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வு கூட்டத்தில் தவறான தகவலை அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறைஅமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். தொடர்ந்து சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது அரசு மேற்கொண்ட நடவடிக்கை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அதில், திருப்பத்தூர் வட்டாரத்தில் இருந்து வந்திருந்த மனு ஒன்றில் தங்கள் பகுதியில் புதர்மண்டி கிடப்பதை அகற்றக் கோரி ஒருவர் மனு அளித்திருந்தார். அதன்பேரில் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலரான சோமதாசிடம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டார். புதரை சுத்தப்படுத்தியதாக சோமதாஸ் பதிலளித்தார். இதையடுத்து அமைச்சர் அந்த மனு அளித்தவரை உடனடியாக செல்போனில் தொடர்பு கொண்டு கேட்டபோது, அந்த மனுதாரர் புதர் அகற்றப்படவில்லை என தெரிவித்தார்.

இதனால் அதிர்ச்சிடைந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வட்டார வளர்ச்சி அலுவலரை எச்சரித்ததுடன் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து ஆய்வுக்கூட்டத்தில் தவறான பதிலளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் சோமதாசை, சஸ்பெண்ட் செய்து கலெக்டர் ஆஷாஅஜித் உத்தரவிட்டார். மேலும், தாமதமாக பணிக்கு வந்த புகாரின்பேரில் கல்லல் இந்திரா நகர் அங்கன்வாடி மைய பணியாளர் விஜயாள் காந்திநகர் காலனிக்கும், இதே மையத்தின் சமையலர் மாலதி ஆலங்குடி மையத்திற்கும், கே.வைரவன்பட்டி மையத்தின் சமையலர் ரேணுகாதேவியை உடைநாதபுரத்திற்கும் இடமாற்றம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.

Related posts

ஒரு கட்சியின் பேராசையை நிறைவேற்றுவதற்காக இந்திய ஜனநாயகத்தை வளைக்க முடியாது: முதல்வர் எதிர்ப்பு

தமிழகத்தில் முதன்முறையாக தென்காசியில் நாய்களுக்கு பிறப்பு கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மையம்: முதல் நாளில் 20 நாய்களுக்கு கருத்தடை

மதுபிரியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி; ஆந்திராவில் வரும் 1ம் தேதி முதல் ரூ.99-க்கு மதுபானங்கள் விற்பனை!!