எவரெஸ்ட் சிகரத்தில் ஏற செல்லும் தமிழ்நாடு வீராங்கனைக்கு ரூ. 10 லட்சம் நிதியுதவி: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை செய்ய செல்லும் தமிழ்நாடு வீராங்கனை முத்தமிழ் செல்விக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.10 லட்சத்திற்கான காசோலை வழங்கினார். 2023ம் ஆண்டு ‘‘ஏசியன் டிரக்கிங் இன்டர்நேஷனல் நிறுவனம்’’ மூலம் நேபாள தலைநகர் காட்மாண்டுவில் இருந்து புறப்படும் குழுவினருடன் இணைந்து, உலகிலேயே மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் 8,848 மீட்டர் ஏறி சாதனை செய்ய சென்னையை சேர்ந்த முத்தமிழ்ச் செல்வி தேர்வு செய்யப்பட்டுள்ளார். சென்னையை சேர்ந்த முத்தமிழ் செல்வி பள்ளிப் பருவத்தில் தடகள வீராங்கனையாக விளங்கியவர். 2021 மார்ச் மாதத்தில் மகளிர் தின விழாவையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காஞ்சிபுரம், மலைப்பட்டு மலையில் 155 அடி உயரத்திலிருந்து கண்ணை கட்டிக்கொண்டு 58 நிமிடங்களில் இறங்கினார்.

அதேபோல, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் இமாச்சல் பிரதேசம், குலுமணாலி மலையில் தனது இரு‌ பிள்ளைகளுடன் ஒரு சிறுமியை முதுகில் கட்டிக்கொண்டும், மற்றொரு சிறுமியுடன் 165 அடி உயரத்தில் இருந்து கண்ணை கட்டிக்கொண்டும் 55 நிமிடங்களில் கீழே இறங்கினார். மேலும், வீரமங்கை வேலுநாச்சியார் புகழ் பரப்பிட 2022ம் ஆண்டு குதிரையில் 3 மணிநேரம் அமர்ந்து‌ 1,389 முறை வில் அம்பு எய்து 87 புள்ளிகள் பெற்றார். இதேபோல, இமாச்சல பிரதேசம், லடாக் பகுதி, காங் யெட்சே பீக் மலையில் 5,500மீ வரை ஏறி சாதனை படைத்தார்.

இந்நிலையில், எவரெஸ்ட் சிகரம் ஏறுதலில் பங்கேற்க முத்தமிழ்செல்வி நிதியுதவி வேண்டி கோரிக்கை விடுத்தார். அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம்‌ நிதியுதவியாக ரூ.10 லட்சத்திற்கான காசோலையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். நிகழ்வின் போது, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி, பொது மேலாளர் (நிர்வாகம்) மணிகண்டன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related posts

நங்கநல்லூரில் 2 திரையரங்கிற்கு சீல்

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

மாடம்பாக்கத்தில் அடிப்படை வசதி கோரி அதிமுக 26ம் தேதி ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு