சென்னையில் வாள்வீச்சு பயிற்சி பெறும் மணிப்பூர் அணியுடன் அமைச்சர் உதயநிதி சந்திப்பு

சென்னை: சென்னையில் பயிற்சி பெற்று வரும் மணிப்பூர் வாள்வீச்சு வீரர், வீராங்கனைகளை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்தார். மணிப்பூரில் நிலவும் கலவர சூழல் காரணமாக அங்குள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழகம் வந்து பயிற்சியை தொடரத் தேவையான உதவிகள், வசதிகள் செய்து தரப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார். இதையடுத்து மணிப்பூரை சேர்ந்த 5 வீராங்கனைகள், 10 வீரர்கள், 2 பயிற்சியாளர் என 17 பேர் கொண்ட வாள்வீச்சு குழுவினர் ஆக. 13ல் சென்னை வந்தனர்.

அவர்கள் தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தங்கும் வசதி, உணவுக்காக தினமும் சுமார் ரூ.30 ஆயிரம் செலவிடப்படுவதாக எஸ்டிஏடி தெரிவித்துள்ளது. கேலோ இந்தியா இளையோர் மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிக்கு தயாராகும் வகையில் அவர்கள் நேரு உள் விளையாட்டு அரங்க வளாகத்தில் வாள்வீச்சு பயிற்சி பெற்று வருகின்றனர். மணிப்பூர் பயிற்சியாளர்கள் நந்தினி, ஹரிபியாரி தேவி, தமிழக பயிற்சியாளர்கள் தினேஷ், ஜிஜோனித் ஆகியோர் பயிற்சி அளிக்கின்றனர். இந்நிலையில் நேற்று பயிற்சியில் ஈடுபட்டிருந்த மணிப்பூர் அணியினரை, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்து உரையாடினார்.

அப்போது அவர்கள் தங்கள் பயிற்சிக்கு தேவையான வசதிகளை செய்து தந்த தமிழக அரசுக்கும், அமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர். அவர்களுக்கு கூடுதலாக வசதிகள் தேவைப்பட்டால் அவற்றையும் செய்து தருவதாக உறுதி அளித்த அமைச்சர் உதயநிதி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: அடுத்து நடைபெற உள்ள தேசிய அளவிலான விளையாட்டுக்கு தங்களை தயார் செய்துக் கொள்வதற்காக இங்கு வந்துள்ளனர். குறைந்தது ஒரு மாதம் தங்களுக்கு பயிற்சி செய்ய வசதி செய்து தர வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

முதல்வர் சொன்னபடி, இங்கு அமைதியான சூழலில் மணிப்பூர் வீரர், வீராங்கனைகள் பயிற்சி செய்வதுதான் முக்கியம். செலவு குறித்து பிரச்னையில்லை. இங்கு பயிற்சி பெறுவதில் ஏதாவது சிரமம் இருக்கிறதா, ஏதாவது உதவி தேவைப்பட்டால் சொல்லுங்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் கூடுதல் வசதிகள் எதையும் கேட்கவில்லை. மாறாக இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

Related posts

மதுரை வைக்கம் பெரியார் நகரில் தனியார் ஷோ ரூம் கட்டுமான பணியில் விபத்து

வேலையின்மையால் இளைஞர்களின் எதிர்காலம் பூஜ்ஜியம்.. நாட்டின் அடிப்படைப் பிரச்சினைகளில் பிரதமர் கவனம் செலுத்துங்கள்: மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம்!!

புகார் அளித்த சேலம் பெரியார் பல்கலை. ஊழியர்களுக்கு மிரட்டல்?