குலசேகரன்பட்டினத்தில் தொழில் தொடங்க ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் திட்டம்: அமைச்சர் டிஆர்பி ராஜாவுடன் சந்திப்பு


நெல்லை: குலசேகரன்பட்டினத்தில் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், ஆஸ்திரேலிய விண்வெளி நிறுவனம் அங்கு தொழில் தொடங்குவதாக தொடர்பாக அமைச்சர் டி.ஆர்.ராஜாவை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளது. இந்தியாவை பொறுத்தவரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ராக்கெட் ஏவுதளம் ஆந்திர மாநிலம், ஹரிகோட்டாவில் அமைந்துள்ளது. பூகோள ரீதியாக ராக்கெட் ஏவுதளம் அமைக்க சிறந்த இடம் குலசேகரன்பட்டினம் என அடையாளம் காணப்பட்டது. இங்கிருந்து ராக்கெட்டுகள் ஏவும் போது தூரம் மிகவும் குறைவு, செலவு மிச்சம் என்பதால் இந்தியாவின் 2வது ஏவுதளம் அமைக்கும் பணிகள் குலசேகரன்பட்டினத்தில் நடந்து வருகிறது.

இதற்காக குலசேகரன்பட்டினம் அருகேயுள்ள கூடல் நகர், மாதவன்குறிச்சி பகுதிகளில் 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் முடிந்துள்ளது. மேலும் ராக்கெட் ஏவுதளம் அமைக்கும் பணிக்காக இஸ்ரோவின் சார்பில் டெண்டர் விடப்பட்டுள்ளது. இங்கு ராக்கெட் ஏவுதளம் அமையும் போது ராக்கெட் உதிரிபாகங்கள் தொழிற்சாலைகளும் குலசேகரன்பட்டினத்தை சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் ராஜாவை, ஆஸ்திரேலிய விண்வெளி முகமையின் தலைவர் என்ரிக்கோ பாலிர்மோ சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது தமிழ்நாட்டில் குலசேகரன்பட்டினத்தில் அமைய உள்ள 2வது ராக்கெட் ஏவுதளம் தொடர்பாகவும், ஆஸ்திரேலிய விண்வெளி முகமை இங்குள்ள நிறுவனங்களுடன் இணைந்து தொழில் தொடங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்!

தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்கு பதிய உத்தரவு: பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அதிரடி

டாக்டர் வீட்டில் 65 சவரன் திருடிய இளம்பெண் கைது