சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர், ஆசிரியர் சங்கங்கள் புறக்கணிப்பு

சேலம்: சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் ஆளுநர் பங்கேற்ற பட்டமளிப்பு விழாவை அமைச்சர் பொன்முடி மற்றும் ஆசிரியர் சங்கங்கள் புறக்கணித்தன. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 22வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு, 2 முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்த 153 மாணவர்கள், பெரியார் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆய்வியல் நிறைஞர், முதுகலை மற்றும் இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 104 மாணவர்களுக்கு என 257 பேருக்கு தங்கப்பதக்கம் மற்றும் பட்டச சான்றிதழை ஆளுநர் ஆர்.என்.ரவி வழங்கினார்.

இந்த விழாவின் மூலம், சேலம், தர்மபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 42,915 மாணவர்களும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகளில் பயின்ற 978 மாணவர்களும், பெரியார் தொலை நிலைக்கல்வி நிறுவனத்தில் பயின்ற 631 மாணவர்களும் என மொத்தம் 44,781 மாணவர்கள் பட்டங்களை பெறுகின்றனர். இதனிடையே, தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல், ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து வருவதை கண்டித்து, பட்டமளிப்பு விழாவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்தார்.

இதேபோல், மாநில அரசுக்கு எதிராக, தவறான வழிகாட்டுதல்களை பின்பற்றி வரும் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து, தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தமிழ்நாடு ஆகியவை இணைந்த பெரியார் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு, பட்டமளிப்பு விழாவை புறக்கணித்தது. இதனால், பேராசிரியர் பிரதிநிதிகளான 21 செனட் உறுப்பினர்கள் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவில்லை. இதேபோல், விழாவிற்கு வந்த மேட்டூர் எம்எல்ஏ சதாசிவம், பாதியிலேயே விழாவில் இருந்து வெளியேறினார்.

Related posts

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் குட்கா விற்ற 13 கடைகளுக்கு சீல்: 20 பேர் மீது வழக்கு

குழந்தை இல்லாத விரக்தியில் ஒட்டுநர் தூக்கிட்டு தற்கொலை

மருத்துவர்கள் தினத்தையொட்டி மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர்