கூடுதல் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக எண்ணூர் பேருந்து நிலையத்தில் அமைச்சர் சிவசங்கர் ஆய்வு

திருவொற்றியூர்: எண்ணூர் பேருந்து நிலையத்திலிருந்து கோயம்பேடு, தாம்பரம், உயர் நீதிமன்றம் போன்ற பல்வேறு பகுதிகளுக்கு மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆனால், பயணிகளின் எண்ணிக்கை ஏற்ப இங்கு பேருந்து வசதி இல்லை. இதனால் சென்னைக்கு செல்ல வேண்டிய மாணவ, மாணவியர், தொழிலாளர்கள், அலுவலர்கள் நீண்ட நேரம் பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, கூடுதல் பேருந்துகள் இயக்க கோரி நேற்று முன்தினம் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், கே.பி.சங்கர் எம்எல்ஏ ஆகியோர் எண்ணூர் மற்றும் திருவொற்றியூர் பேருந்து நிலையங்களை நேற்று ஆய்வு செய்தனர். அப்போது பேருந்துகள் எண்ணிக்கை, அடிப்படை வசதிகள் குறித்து அங்கு இருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர்.

பின்னர், அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: எண்ணூரில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கு எம்எல்ஏ நிதியிலிருந்து ₹1.5 கோடி, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ₹1.29 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 6 மாத காலத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும். மேலும் பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அதிகாலை நேரத்தில் பேருந்து சேவை அதிகரிக்கப்பதோடு, அனைத்து பேருந்துகளும் சரியான நேரத்தில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். எண்ணூரில் இருந்து டோல்கேட் வரை பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதனால் கூடுதல் பேருந்து வசதிகள் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து கழகத்திற்கு புதிதாக 7200 பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த வாரத்தில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் அந்தந்த மாவட்டங்களில் 300க்கும் மேற்பட்ட புதிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் விரைவில் சென்னை மாநகரத்தில் புதிய பேருந்துகள் இயக்கப்படும். பழைய பேருந்துகள் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆய்வின்போது போக்குவரத்து துறை மேலான் இயக்குனர் ஆர்ல்பி ஜான் வர்கீஸ், இணை மேலாண் இயக்குனர் நடராஜன், பொது மேலாளர்கள் சுப்பிரமணி, சவுந்தரபாண்டியன் மற்றும் மண்டல, கிளை மேலாளர்கள், தொமுச நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related posts

தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு வெயில் அதிகரிக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் அனைத்து சட்டக் கல்லூரிகளையும் முடிவிடலாமே: உயர்நீதிமன்ற மதுரை கிளை சரமாரி கேள்வி

புதுக்கோட்டையில் துயரம்.. வருவாய் கோட்டாட்சியர் கார் மோதியதில் பைக்கில் சென்ற 2 பேர் உயிரிழப்பு!!