24 மணி நேரத்திற்கு இதயத்திற்கு ஓய்வு தேவை.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை : மருத்துவமனை அறிக்கை!!

சென்னை:அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் கடந்த 14ம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் செந்தில் பாலாஜியின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதாகவும் உடனடியாக அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனவும் பரிந்துரைத்தனர்.

அதைத்தொடர்ந்து, நீதிமன்றத்தின் உத்தரவின்படி கடந்த 15ம் தேதி இரவு ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றப்பட்டார். காவேரி மருத்துவமனையில் அவரை தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில் நேற்று இதய நிபுணர் ரகுராம் தலைமையிலான மருத்துவக் குழு, செந்தில் பாலாஜிக்கு 5 மணி நேரம் அறுவை சிகிச்சையை மேற்கொண்டது.

இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெண்டிலேட்டர் உதவியுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி 24 மணி நேரமாக சிகிச்சையில் உள்ளார்.அறுவை சிகிச்சை நடைபெற்ற 24 மணி நேரத்திற்கு இதயத்திற்கு ஓய்வு தேவை என்பதால் வென்டிலேட்டர் பொருத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரத்திற்கு பிறகு செயற்கை சுவாசம் முழுவதுமாக நீக்கப்பட்டு இயற்கையாக சுவாசிக்க தொடங்குவார்.செந்தில் பாலாஜியின் ரத்த ஆக்சிஜன் அளவு, இருதய துடிப்பின் அளவு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சைக்காக வழங்கப்பட்ட மயக்க மருந்து முற்றிலுமாக செயல் இழந்துவிட்டது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வலி நிவாரணி மருந்து வழங்கப்பட்டுள்ளது,” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வடகிழக்கு பருவமழையை முன்னெச்சரிக்கை: ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் நியமனம்

தொடர் விபத்துக்கு பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு இல்லாததே காரணம்: மதுரைக் கிளை நீதிபதிகள் வேதனை

திருப்பதி திருக்குடை ஊர்வலத்தை அக்டோபர் 2ஆம் தேதி போக்குவரத்து மாற்றம்