புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தினால் உயர்க்கல்வியில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை விகிதம் அதிகரிப்பு : அமைச்சர் பொன்முடி

சென்னை: புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தினால் உயர்க்கல்வியில் மாணவ-மாணவிகளின் சேர்க்கை விகிதம் அதிகரித்துள்ளதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் காலை உணவுத் விரிவாக்கத் திட்டத்தை தொடங்கி வைத்த பின், தமிழ்நாடு, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சென்னை தலைமை செயலகத்தில் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கிராமப்புறங்களில் இருந்து அதிக அளவிலான மாணவர்கள் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளனர். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் உயர்க்கல்வி மாணவர் சேர்க்கை 52 சதவிகிதம் உயர்ந்து இருப்பதற்கு திராவிட அரசுதான் காரணம்.

நடப்பாண்டில் பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முதலமைச்சர் அறிவித்த புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் திட்டத்தினால் உயர்க்கல்வியில் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசுப்பள்ளியில் பயின்ற மாணவர்கள் 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் அதிகளவில் சேர்த்துள்ளனர். பொறியியல் கல்லூரியில் வருகிற 22ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக கலந்தாய்வு தொடங்கி செப்டம்பர் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுப்பிரிவில் மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும். செப்டம்பர் 11-ம் தேதிக்கு பிறகுதான் எவ்வளவு இடங்கள் காலியாக இருக்கும் என்பதை தெரிவிக்க முடியும். பொறியியல் கல்லூரிகளில் மட்டுமல்லாது அரசு கல்லூரிகளிலும் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரத்துள்ளது. பாலிடெக்னிக் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளது. அதிலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம்,”இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

ஆளுநர் ரவிக்கு கிறிஸ்தவ ஆயர்கள் பேரவை கண்டனம்!!

கனிமவள தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு மேல்முறையீடு

விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு தரப்பினருக்கு இடையே மோதல்: கர்நாடகாவில் 144 தடை உத்தரவு.! போலீசார் குவிப்பு