தர நிலைகள், ஒழுங்கு முறைகள் குறித்து ஆவின் தர உறுதி பிரிவு அலுவலர்களுக்கு பயிற்சி: அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்

சென்னை: சென்னை நந்தனம் ஆவின் இல்லத்தில் நேற்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆவின் தரம் உறுதி பிரிவு அலுவலர்களுக்கான உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் தர நிலைகள், வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்கு முறைகள் குறித்த பயிற்சியை தொடங்கி வைத்து சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில் பால்வளத்துறை இயக்குநர் மற்றும் மேலாண்மை இயக்குநர் வினீத், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் இணை இயக்குனர் அருள் ஆனந்த், தொழில்நுட்ப அதிகாரி லிடியா சோனா லிசா, மற்றும் தொழில்நுட்ப அதிகாரி கமலவிநாயகம் ஆகியோர் பயிற்சி வழங்கினர். மேலும், ஆவின் தரம் உறுதி பிரிவு அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின்னர், அமைச்சர் தி.நகர் மண்டல அலுவலக வாயிலில் உள்ள ஆவின் விற்பனை நிலையத்தை ஆய்வு செய்தார். அங்கு வந்த வாடிக்கையாளர்களிடம் ஆவின் பால் மற்றும் பால் உப பொருட்கள் குறித்த கருத்தை கேட்டறிந்தார். தி.நகர் மண்டல அலுவலகத்தை ஆய்வு செய்து, அங்கு மாதாந்திர பால் அட்டை விற்பனை குறித்து விரிவாக ஆய்வு நடத்தி, நுகர்வோர்களிடம் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பால் அட்டை புதுப்பித்தல் தொடர்பான விவரங்களை கேட்டறிந்தார். மாதாந்திர பால் அட்டைதாரர்களுக்கு அரசு வழங்கும் சலுகை சரியான நுகர்வோர்களுக்கு சென்றடைகிறதா என்பதை உறுதி செய்தார். பின்னர், அமைச்சர் தி.நகர் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் சென்று மாதாந்திர பால் அட்டை விற்பனை மற்றும் அதற்கு பெறப்படும் அடையாள அட்டை நகல்களை ஆய்வு செய்தார். தி.நகர் பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கம் மூலம் மாதாந்திர பால் அட்டைகள் விற்பனை மற்றும் அதன் பயனாளர்கள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். இந்த மாதாந்திர பால் அட்டை நடைமுறையை எளிமைப்படுத்துவதற்கும், இணைய வழியாக பால் அட்டை விற்பனையை ஊக்கப்படுத்துவதற்கும் தேவையான ஆலோசனைகளை வழங்கினார்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை