சாலைகள், குடியிருப்புகளில் தேங்கியுள்ள மழைநீரை விரைந்து அகற்ற நடவடிக்கை குடிநீர் வாரியத்தில் 24 மணி நேர கட்டுப்பாட்டு மையம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

* பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்

சென்னை: சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ள கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகளை அமைச்சர் கே.என்.நேரு நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள 325 கழிவுநீர் உந்து நிலையங்கள் மற்றும் 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடுகள் அலுவலர்களால் தொடர்ந்து தீவிரமாக கள ஆய்வு செய்யப்பட்டது. இங்கு கழிவுநீரகற்றும் பணிகள், மழைநீரை அகற்றுதல் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகளை அகற்றும் பணிகள் துரிதமாக தொடர்ந்து மேற்கொள்ளப்பட உத்தரவிட்டுள்ளோம். இந்நிலையங்களில் உள்ள ஜெனரேட்டர்கள் நல்ல நிலையில் இயங்குவதை உறுதி செய்து நிலையத்தின் செயல்பாடுகள் தொய்வின்றி மேற்கொள்ளப்படுவதை தொடர்ந்து கண்காணிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

கழிவுநீர் பிரதான குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்கான தூர்வாரும் இயந்திரங்கள், அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், ஜெட்ராடிங் வாகனங்கள் என அனைத்து கழிவுநீரகற்றும் இயந்திரங்களும் தொய்வின்றி பணிகளில் ஈடுபடுத்தப்படவும் உத்தரவிட்டுள்ளோம். மழைநீர் தேங்கிய பகுதிகளில் குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டு அதை பயன்படுத்தும் முறைகள் குறித்து விளக்க வேண்டும். மேலும், சாலைகளில் உள்ள மழைநீர், குடியிருப்பு பகுதிகளில் தேங்கியுள்ள கழிவுநீரை விரைந்து அகற்றுதல் வேண்டும். மேலும், பொதுமக்கள் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்றல் தொடர்பான புகார்கள் தெரிவிப்பதற்கு ஏதுவாக சென்னை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்பட்டு வரும் கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு மையத்தை 044-4567 4567 (20 இணைப்புகள்) மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்.1916-ல் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

கேரளாவில் நிபா வைரஸ் பரவல்: குமரி எல்லையில் மருத்துவ குழு தீவிர சோதனை

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?