மேகதாது அணை விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் என பிரதமர் கூறியிருப்பது தற்கொலைக்கு சமம் :அமைச்சர் துரைமுருகன்

வேலூர் : மேகதாது அணை விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் என பிரதமர் கூறியிருப்பது தற்கொலைக்கு சமம் என தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அண்மையில் பிரதமர் மோடி, மேகதாது அணை தொடர்பாக தமிழக அரசும், கர்நாடக அரசும் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். ஆனால் தமிழ்நாடு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு கர்நாடகா தயாராக இல்லை என்று அம்மாநில நீர்வளத்துறை அமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துவிட்டார். இந்த நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர்-இலத்தேரி இடையே, ரூ. 29 கோடியில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய பின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “ஏற்கனவே 38 முறை பேசியும் சுமூக தீர்வு ஏற்படவில்லை என்பதால்தான் காவிரி பிரச்சனை நடுவர் மன்றத்துக்கு சென்றது. நேரடியாகவே பட்டேலும்-கலைஞரும் பிரதமராக இருந்த தேவகெளடாவை வைத்துக்கொண்டே 3 நாள்கள் பேசினோம் அப்போதும் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை.பேச்சுவார்த்தையால் இந்த பிரச்னை தீராது என்பதனால், முடிவை மத்திய அரசுக்கு அனுப்பினோம். அதன்பின்னே வி.பி.சிங் அவர்கள் நடுவர் மன்றம் அமைப்பதாக உறுதியளித்தார்.

இப்போது தமிழ்நாடு அரசு பேச்சுவார்த்தை நடத்தினால் கர்நாடக அரசு ஒத்துழைக்காது, இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்திற்கு சென்றால் இரண்டு வருடங்களுக்கு காலதாமதம் ஆகும். அப்போது கர்நாடக அரசு பேச்சுவார்த்தையில் தீர்த்துகொள்கிறோம் என்று சொல்லும், அப்போது அந்த வழக்கை உச்ச நீதிமன்றம் முடித்து அனுப்பிவிடும், பின்பு பேச்சுவார்த்தை நடத்த கர்நாடக அரசு அழைக்காது. ஆகவே, பிரதமர் மோடி இரண்டு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தையில் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்வது தற்கொலைக்கு சமம்” ஆகும். இவ்வாறு தெரிவித்தார்.

Related posts

அரசியலமைப்புச் சட்டத்தின் மீது பிரதமர் மோடியின் தாக்குதலை மக்கள் தெளிவாகப் புரிந்துக் கொண்டுள்ளனர்: பாஜக, ஆர்எஸ்எஸ் மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்

கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்

எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு செப் 17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு