அமைச்சரின் உத்தரவை ரத்து செய்து புல்லட்சாமிக்கு கவர்னர் அதிர்ச்சி வைத்தியம் அளித்தது பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘தனது ஆதரவை பெருக்கிக் கொள்ள மா.செ. கூட்டத்தை கூட்டப்போறாராமே இலைக்கட்சி தலைவர்..’’ என்ற முதல் கேள்வியுடன் வந்தார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவரான பிறகு சேலத்துக்காரர் சந்தித்த அனைத்து தேர்தலிலும் தோல்வியை தழுவிக்கிட்டு இருக்கிறாரு.. உள்கட்சி பிரச்னையில் தத்தளித்துக்கொண்டிருக்கும் நேரத்திலேயே விக்கிரவாண்டி இடைத்தேர்தலும் வந்துவிட்டது.. இதிலிருந்து தப்பிக்க என்ன வழின்னு தேடிக்கிட்டிருந்த நேரத்துல கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கு வசமா கிடைச்சதாம்…

இதைவச்சி அரசியல் செஞ்சிடலாமுன்னு திட்டமிட்டு, தேர்தல் புறக்கணிப்போட சட்டசபையில கோஷத்தை எழுப்பி கட்சியினரிடையே எழுந்த கோபத்தையும், தேர்தலையும் மறைச்சிட்டாராம்.. தேர்தல் தோல்விக்கு பிறகு மா.செ.க்கள் கூட்டத்தை கூட கூட்டாமல் கொந்தளிப்பாக இருந்த நிர்வாகிகளை சமரசம் செஞ்சதாக கட்சிக்காரங்க சொல்றாங்க.. அதையும் மீறி கேள்வி கேட்கும் பசையுள்ளவர்களுக்கு புதிய மா.செ. பதவி வழங்குவதாக சொல்லியிருக்காராம்..

அதெப்படி சாத்தியமாகும் என்றால், ரெண்டு தொகுதிக்கு ஒரு மா.செ. பதவி கொடுக்கப்போறேன்னு சொல்லியிருக்காராம்.. இதனால பதவிகள் அதிகரிக்கும், கட்சியிலும் வேலை தீவிரமாக இருக்கும்னு இலைக்கட்சி தலைவர் நம்புகிறாராம்.. இப்படித்தான் மலராத கட்சி எல்லோருக்கும் பதவி என அனைவருக்கும் பொறுப்புகளை வழங்கி கூட்டத்தை கூட்டுறாங்களாம்.. அதேபோல, அனைவருக்கும் பதவி என்ற ஆயுதத்தை கையிலெடுத்து தனது ஆதரவை பெருக்கிக்கொள்ளப்போறாராம்..

இன்னும் ஓரிரு நாட்களில் மா.செ. கூட்டத்தை கூட்டப் போறாராம்.. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருதாம்.. அவரது சொந்த மாவட்டத்துல நிழலான மா.செ. ஒருவர், நிர்வாகிகள் கூட்டத்தை போட்டு, தேர்தலில் வேலை செய்யாதவர்களை மாத்தப்போறேன்னு சொல்லியிருக்காரு.. எல்லாம் இலைக்கட்சி தலைவர் கொடுத்த தைரியமுன்னு இலைக்கட்சி தொண்டர்கள் பேசிக்கிறாங்க…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘அமைச்சரின் உத்தரவை ரத்து செய்து, புல்லட்சாமி அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திருக்கும் கவர்னர் பற்றி சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘புதுச்சேரியில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவிய ஆளும் தரப்பு அதிர்ச்சியில் இருந்து மீண்டபாடில்லை. தோல்விக்கான காரணம் குறித்து புல்லட் சாமி கட்சி தரப்பு தனியாக ரகசிய களஆய்வுகளை நடத்திக்கிட்டு இருக்காம்.. மறுபுறம் பாஜ மற்றும் ஆதரவு சுயேச்சைகள் கோஷ்டியாக செயல்பட்டு புல்லட்சாமி மற்றும் தனது கட்சி அமைச்சர்கள் மீதான அதிருப்தியை டெல்லி வரை கொண்டு சென்றாங்களாம்..

ஆனாலும் தேர்தலில் தோற்ற பிறகும் அமைச்சர் இருக்கையை விடாமல் இறுக பிடித்துக் கொண்டிருக்கும் சிவாயமானவர், தேர்தல் நன்னடத்தை விதிகள் தளர்த்தப்பட்ட கையோடு புதுச்சேரி அரசின் சென்டாக் கன்வீனராக பல்வேறு குற்றச்சாட்டுக்கு பெயர் போன ஒருத்தர நியமித்து உத்தரவு பிறப்பித்தார். உயர்கல்வி சார்ந்த முக்கிய பொறுப்பில் அவசர கதியிலான, தகுதியற்ற நபர் நியமனம் குறித்து ஆளுங்கட்சி தரப்பிலேயே புகைச்சல் இருக்கிறதாம்..

கடந்த வார இறுதியில் ராஜ்நிவாஸ் சென்ற பாஜ அதிருப்தி எம்எல்ஏக்கள் தரப்பு தங்களது அமைச்சர்கள் மீது அடுக்கடுக்கான புகார்களை கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும்னு வலியுறுத்திட்டு திரும்பி இருக்காங்க.. இந்தநிலையில், சிவாயமானவர் நியமித்த சென்டாக் கன்வீனர் நியமனத்தை கவர்னர் சிபிஆர் தடாலடியாக ரத்து செய்திருப்பது புல்லட்சாமி தரப்புக்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்காம்.. கவர்னரின் இத்தகைய நடவடிக்கை புல்லட்சாமி அரசுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளதாக ஆளுங்கட்சி அதிருப்தி தரப்பு கொண்டாட்டத்தில் இருப்பதுதான் புதுச்சேரி அரசியல் ஹைலெட்…’’ என்கிறார் விக்கியானந்தா.

‘‘பிளாக்குல சரக்கு பாட்டில் சேல்ஸ் பண்றதுக்கு காக்கிகள் உடந்தையா இருக்கிறதா புகார் வந்திருக்காமே எந்த ஊர்ல..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா. ‘‘குயின் பேட்டை மாவட்டத்துல நெமிலி காக்கிகள் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகள்ல பிளாக்ல சரக்கு பாட்டில் சேல்ஸ் அதிகமா நடக்குதாம்.. சுமார் 10 இடங்கள்ல சரக்கு பாட்டில் சேல்ஸ் நடக்குதாம்.. அதோட பள்ளிக்கு அருகாமையிலேயே, போதை பொருட்களும் சேல்ஸ் செய்றாங்களாம்.. இதை மாணவர்கள் வாங்கி பயன்படுத்துறதாக அதிர்ச்சி தரும் புகாரும் வந்திருக்குது..

கேட்டா, காக்கிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுக்குறோம், கேஸ் போட்டாலும், அவங்களே வீட்டுக்கு அனுப்பிடுவாங்கன்னு பேசுறாங்களாம்.. இதனால சம்பந்தப்பட்ட காக்கிகள் லிமிட்ல மாவட்ட உயர் காக்கி அதிகாரிகள் ஆய்வு செய்து, உண்மை நிலவரத்தை கண்டுபிடிச்சு, தப்புக்கு துணைபோகிற காக்கிகள் மேல நடவடிக்கை எடுக்கணும்னு ஏரியா ஜனங்க புகார் சொல்றாங்க..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘வனப்பகுதியில் மரங்களை வெட்டி கடத்த துணைபோன அதிகாரி லகரங்களை அள்ளிக்கிட்டு சொந்த ஊருக்கே மாற்றலாகி போயிட்டாராமே…’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மலைகளின் இளவரசி ஊரின் வனப்பகுதியில், சவுக்கு மரங்களை வெட்டி விற்பதற்கு ஒப்பந்ததாரர்கள் மூலம் வனத்துறையினர் அனுமதி அளித்ததால் வனத்துறையினருக்கு பெருத்த லாபம் கிடைத்து வந்ததாம்.. தற்போது இது முற்றிலுமாக நிறுத்தப்பட்ட நிலையில் பட்டா நிலங்களில் மரங்கள் வெட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பட்டா நிலங்களில் உள்ள சவுக்கு, குங்கிலியம் உள்ளிட்ட மரங்களை வெட்டுவதற்கு வனத்துறையின் அனுமதி பெற வேண்டும்.

கலெக்டர் அனுமதி அளித்தவுடன், வனத்துறையினர் அந்த பட்டா நிலத்தை ஆய்வு செய்து, அங்குள்ள மரங்களுக்கு தகுந்தவாறு அனுமதி சீட்டை வழங்குவாங்க.. ஆனால் கொடைக்கானலில் உள்ள சிவபெருமான் பெயரைக் கொண்ட வனத்துறை அலுவலர், மேலதிகாரிகளை தனது பைக்கில் போட்டுக்கொண்டு அதிக அளவிலான அனுமதிச்சீட்டை தருவதை வழக்கமாக வைத்திருந்தாராம்.. அதேபோல, பட்டா நிலங்களில் வெட்டி விற்க வெளியூர்களுக்கு கொண்டு செல்லப்படும் ஒவ்வொரு மர லோடு லாரிக்கும் ரூ.20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை, வனத்துறை அதிகாரிக்கு மரங்களை வெட்டுபவர்கள் வழங்கணுமாம்..

அப்புறம் வனத்துறை செக் போஸ்ட்டிலும் பணம் வழங்கணும். எனவே, அனுமதி பெற்றவங்க தங்கள் இஷ்டத்துக்கு மரங்களை வெட்டி கடத்தி வர்றாங்க.. இதற்கு துணை போன சிவபெருமான் பெயரைக் கொண்ட வனத்துறை அலுவலர், தனக்கு தேவையான அளவிற்கு லகரங்களை பெற்றுக்கொண்டு தற்போது சொந்த ஊருக்கே மாற்றலாகி சென்று விட்டாராம்… கொடைக்கானலில் பட்டா நிலங்களில் வெட்டப்படும் மரங்கள் குறித்து ஆய்வு செய்தால், மிகப்பெரிய மோசடி அம்பலத்துக்கு வருமாம்.. பல தலைகள் சிக்குமென இளவரசி பூமியில் பரபரப்பான டாக் ஓடுது…’’ என முடித்தார் விக்கியானந்தா.

Related posts

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு