அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று இறுதி விசாரணை

சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு எதிரான வழக்கில் இன்று உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணை நடக்கிறது. சொத்து குவிப்பு வழக்குகளில் முன்னாள் இந்நாள் அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோருக்கு எதிரான வழக்குகளின் இறுதி விசாரணை நேற்று முதல் தொடங்கும் என்று நீதிபதி அறிவித்திருந்தார்.

இந்த வழக்குகள் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளதை அடுத்து, அந்த வழக்கின் விசாரணையை செப்டம்பர் மாதத்திற்கு நீதிபதி தள்ளி வைத்தார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளி வைக்க கோரப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு எதிரான வழக்கின் விசாரணையை இன்றைக்கு தள்ளி வைத்தார். இன்றும், நாளையும், மார்ச் 5ம் தேதியும் விசாரணை நடைபெறும் என்றும் அவர் அறிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கின் விசாரணை மார்ச் 5 மற்றும் 6ம் தேதிகளிலும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மீதான வழக்கின் விசாரணை மார்ச் 7 மற்றும் 8ம் தேதிகளிலும் நடைபெறும் என்றும் நீதிபதி அறிவித்துள்ளார்.

Related posts

மங்களூரு அருகே 2 தலையுடன் பிறந்த கன்றுக்குட்டி

ரூ 100 கோடி மதிப்பு நிலத்தை குமாரசாமிக்கு விடுவிக்க எடியூரப்பா பெற்ற பங்கு எவ்வளவு?

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்