அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு அமலாக்க துறையிடம் உள்ள ஆவணங்களை கோரிய மனு மீதான விசாரணை தள்ளிவைப்பு: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை டிசம்பர் 4 தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டம் தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ஜூன் 14ல் கைதான அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆகஸ்ட் 12ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 3 ஆயிரம் பக்கம் கொண்ட குற்றப்பத்திரிக்கையை அமலாக்க துறையினர் தாக்கல் செய்தனர்.

அவரது நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் உடல்நிலை பாதிக்கபட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, அங்கிருந்து காணொலி காட்சி மூலம் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன்பு ஆஜார்படுத்தபட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலை டிசம்பர் 4ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டபோது, அமலாக்கதுறை எடுத்துச் சென்றும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாத ஆவணங்களை அமலாக்கதுறை வசம் உள்ளதாகவும் அந்த ஆவணங்களை தங்களிடம் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் கடந்த விசாரணையின்போது மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவிற்கு அமலாக்க துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் என்.ரமேஷ் நேற்று பதில் மனு தாக்கல் செய்தார். அதில், இந்த வழக்கிற்கு தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு குற்றம்சாட்டப்பட்ட செந்தில் பாலாஜிக்கு வழங்கபட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆவணங்களை கோரிய மனு மீதான விசாரணையை டிசம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related posts

2ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் பெரிய அளவில் பார்க்கிங் வசதி ஏற்படுத்த 10 ஏக்கர் நிலம் தேர்வு: பயணிகள் நலன் கருதி நடவடிக்கை

ஜெயா கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் கோலப் போட்டிகள்

குடியிருப்புக்கு நடுவில் உள்ள மதுபானக் கடையால் மக்கள் அவதி: வேறு இடத்தில் மாற்ற கலெக்டரிடம் மனு