ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய சட்டமன்ற பேரவை செயலக அலுவலகத்திற்கான சுழற்கோப்பை: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு அரசின் ஆட்சிமொழி சட்டத்திற்கிணங்க அரசின் நிர்வாக மொழியாக தமிழ்மொழி இருந்து வருகிறது. ஆட்சிமொழி சட்டத்தின் அடிப்படையில் பிறப்பிக்கப்பெற்றுள்ள அரசாணைகளின்படி, அரசின் அனைத்து துறைகள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் நிர்வாக அலுவல்களில் முழுமையாக தமிழ்மொழியை பயன்படுத்திடும் நோக்கில் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் எனும் இலட்சிய இலக்கை அடைய தமிழ் வளர்ச்சி துறையால் ஆட்சிமொழி திட்டச் செயலாக்கம் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ் வளர்ச்சி துறையின் தலையாய பணியான ஆட்சிமொழி திட்ட செயலாக்க பணியினை மேன்மையுற செய்திட, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் தலைமை செயலகத் துறைகளிலும், தமிழ் வளர்ச்சி இயக்குநரால் துறை தலைமை அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், அரசு நிறுவனங்கள், மாவட்டாட்சியர் அலுவலகங்கள் ஆகியவற்றிலும் இத்திட்டம் தொடர்பான ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மண்டல தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர்கள், மாவட்ட தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர்கள், மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர்கள் ஆகியோர் மாவட்ட நிலை மற்றும் சார்நிலை அலுவலகங்களில் இந்த ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் 2022ம் ஆண்டிற்கான ஆட்சிமொழி திட்ட செயலாக்க ஆய்வு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் தலைமையில் தலைமை செயலக அலுவலகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவற்றுள், தமிழ் ஆட்சிமொழி திட்ட செயலாக்கத்தில் சிறந்து விளங்கிய அலுவலகமாக தலைமை செயலக சட்டமன்ற பேரவை செயலகம் தெரிவு செய்யப்பட்டு அதற்கான சுழற்கோப்பையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் சட்டமன்ற பேரவை செயலக அரசு முதன்மை செயலாளர் சீனிவாசனிடம் வழங்கினார். இந்நிகழ்வின்போது தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் ராஜாராமன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ஔவை அருள் ஆகியோர் உடனிருந்தனர்.

 

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்