விவசாயிகளின் கோரிக்கையை பாஜ காதுல போட்டுக்கல இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச ஆதரவு விலை நிச்சயம்: ராகுல் காந்தி உறுதி

ரோஹ்தஸ்: இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் விவசாயிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உறுதி அளித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நீதி யாத்திரை 2ம் முறையாக நேற்று மீண்டும் பீகாருக்குள் நுழைந்தது. ரோஹ்தஸ் பகுதியில் விவசாயிகளிடையே பேசிய ராகுல் காந்தி, “பாஜ ஆட்சியில் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் பயிர்களுக்கு லாபகரமான விலையை பெறவில்லை.

விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதரவு விலை, விவசாய கடன் தள்ளுபடி ஆகிய விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற பாஜ அரசு மறுத்து வருகிறது. விவசாய கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை எதுவானாலும் விவசாயிகளின் கோரிக்கையை காங்கிரஸ் நிறைவேற்றி உள்ளது. 2024 மக்களவை தேர்தலில் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் விவசாய கடன் தள்ளுபடி, விளைபொருட்களுக்கு உரிய ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும்” என்று உறுதி அளித்தார்.

தொடர்ந்து கைமூர் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “அக்னிவீரர் திட்டம் மூலம் ராணுவத்தை பாஜ அரசு இரண்டாக பிளந்து விட்டது. ஒரு வழக்கமான ராணுவ வீரருக்கு வழங்கப்படும் சம்பளம் அக்னி வீரருக்கு தரப்படுவதில்லை. இன்னும் மோசமான விஷயம் அக்னிவீரர் பணியின்போது உயிரிழந்தாலும் அவர் தியாகியாக கருதப்பட மாட்டார். அவருக்கு உரிய இழப்பீடு தரப்படாது. மோடி அரசின் பாதுகாப்பு பட்ஜெட் ராணுவ வீரர்களின் ஊதியம், பிற சலுகைகளுக்கு பணத்தை ஒதுக்க விரும்பவில்லை. அது அதானி போன்ற பெரும் தொழிலதிபர்களின் நலனுக்காக செலவழிக்க விரும்புகிறது” என்று குற்றம்சாட்டினார்.

* ராகுலுக்கு கார் ஓட்டிய தேஜஸ்வி
சசராம் பகுதியில் ராகுல் காந்தியை பீகார் முன்னாள் துணைமுதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியினர் வரவேற்றனர். பீகாரில் ராகுலின் நீதி பயணத்தில் இணைந்த தேஜஸ்வி யாதவ் சசராம் பகுதியில் இருந்து ராகுலின் காரை ஓட்டி சென்றார்.

* லாலு, ரப்ரியிடம் மன்னிப்பு கேட்டவர் நிதிஷ்தேஜஸ்வி ஆவேசம்
ராகுலுடன் இணைந்து நடந்த யாத்திரையில் பீகார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது; கடந்த கால துரோகங்களுக்காக எனது பெற்றோர் லாலு பிரசாத், ராப்ரி தேவி ஆகியோரிடம் முதல்வர் நிதிஷ்குமார் மன்னிப்பு கேட்டார். நாங்கள் முதலில் அவரை மீண்டும் நம்பவில்லை. ஆனால் நாடு முழுவதும் உள்ள தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்கள் அனைவரும் பாஜவுக்கு எதிரான போராட்டத்தின் பெரிய நலனுக்காக நிதிஷுடன் சேர அறிவுறுத்தியதால், தியாகம் செய்து கூட்டணிக்கு நாங்கள் ஒப்புக் கொண்டோம். இப்போது நிதிஷ் மீண்டும் பாஜவுடன் இணைந்துள்ளார். அவர் மீண்டும் பல்டி அடிக்க மாட்டார் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இவ்வாறு கூறினார்.

Related posts

கோவையில் யானைகள் முகாம்: நவமலைக்கு செல்ல தடை

நாட்றம்பள்ளி அருகே 10 ஆண்டுகளாக எரியாத உயர் கோபுர மின்விளக்கு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் சாலைகளில் சுற்றித்திரிந்த மனநலம் பாதித்தவர்கள் 57 பேர் மீட்பு