ஸ்டான்லி மருத்துவ கல்லூரி விடுதி அருகே சமையல் எண்ணெய் ஏற்றி வந்த மினி லாரி கவிழ்ந்து விபத்து: 3 மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

தண்டையார்பேட்டை: வண்ணாரப்பேட்டை பழைய சிறைச்சாலை சாலையில், ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மகளிர் விடுதி அருகே, நேற்று 3 டன் சமையல் எண்ணெயுடன் மினி லாரி ஒன்று மயிலாப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, முன்னே சென்ற பஸ்மீது மோதாமல் இருக்க, மினி வேன் டிரைவர் திடீரென வண்டியை திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி, தடுப்புச் சுவரில் மோதி சாலையில் கவிழ்ந்தது. இதனால் சாலையில் எண்ணெய் கொட்டி பரவியதால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து, புது வண்ணாரப்பேட்டை போக்குவரத்து ஆய்வாளர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு ஆய்வாளர் காசியப்பன் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகியோரும் அங்கு வந்தனர். இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் அருண் காயமடைந்ததால், அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வருகிறார். அவருடன் வந்த கண்ணன் என்பவருக்கு தலையில் அடிபட்டு, அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முக்கிய சாலையில் லாரி கவிழ்ந்து சாலையில் எண்ணெய் பரவியதால் அவ்வழியே சென்றவர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்குப் பிறகு விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தினர். இதையடுத்து, போக்குவரத்து சீரானது. இதுதொடர்பாக வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது