மினி மீல்ஸ்: பிஸ்கெட் பிறந்த கதை

பிஸ்கெட்டைப் பிடிக்காத மனிதர் உண்டோ? பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை முதல் வயதானவர்கள் வரை பிஸ்கெட் என்றால் தனிப் பிரியம்தான். சிலருக்கு சிலவகை பிஸ்கட்கள் பிடிக்காதே தவிர பிஸ்கெட்டே பிடிக்காது என்பவர்கள் மிகவும் குறைவு. சாக்லெட்டை சாப்பிடாதீங்க எனும் மருத்துவர்கள்கூட பிஸ்கெட்டை அளவாகச் சாப்பிடுங்க என்றே அறிவுறுத்துகிறார்கள். இப்படி சகல தரப்பினரின் அபிமானத்தையும் பெற்ற பிஸ்கெட் உலகுக்கு வந்தது எப்படி?பிஸ்கெட் என்றால் பிரெஞ்சு மொழியில் இரண்டு முறை சுட்டது என்று அர்த்தம். ரொட்டி யின் வேறொரு வடிவமாகவே பிஸ்கெட்டை உருவாக்கினார்கள் ஐரோப்பியர்கள். அந்தக் காலத்தில் அவர்கள் கப்பல் பயணம் செய்தபோது டன் கணக்கில் பிஸ்கெட்களைச் சுமந்து திரிந்திருக்கிறார்கள். பிஸ்கெட்கள் நீண்ட நாட்கள் கெட்டுப்போகாது என்பதுதான் இதற்குக் காரணம்.அமெரிக்கர்கள் முதலில் பிஸ்கெட்டை ‘இன்ஸ்டண்ட் பிரெட்’ அதாவது திடீர் ரொட்டி என்று அழைத்தனர். ரொட்டியை பேக்கிங் சோடா கலந்து தயாரித்தால் அது பிஸ்கெட் என்பதாக எளிய ரெசிப்பிமுறைதான் அப்போது இருந்தது.

முதல் உலகப்போரின் போது வீரர்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் நீண்ட நாட்கள் பிஸ்கெட்கள் கெட்டுப்போகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவும் சுவையும் முக்கியம் என்ற யோசனையிலும் புதிய வகை பிஸ்கெட்டை உருவாக்கினார்கள். அதுதான், அன்ஸாக் (Anzac) வகை பிஸ்கெட்டுகள்.1877ல் ஜான் பாமன் என்பவர்தான் முதன்முதலில் இயந்திரம் மூலம் பிஸ்கெட் தயாரித்தார். இவர் தயாரித்த பிஸ்கெட்டுகள் டீ கப்பின் சாஸர் வடிவத்தில் பெரியதாக இருந்தன. பிஸ்கெட் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுப்பொருள்தான் என்றாலும், அதை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். பிஸ்கெட்டை அடிக்கடி சாப்பிட்டால் அதில் உள்ள சர்க்கரைப் பொருள் ஒட்டிக்கொள்ளும். நிறைய பேர் பிஸ்கெட்டுடன் டீயும் அருந்துவதால், டீயில் உள்ள சர்க்கரையும் அதனோடு இணைந்துகொள்ளும். அதனால்தான் அதிகம் பிஸ்கெட் சாப்பிடுபவர்களின் பற்கள் கறைபடிந்து காணப்படுகின்றன. இன்று, சர்க்கரை நோயாளிகளுக்கான சுகர்ஃப்ரீ பிஸ்கெட்கள் முதல் விதவிதமான பிஸ்கெட்கள் சந்தைக்கு வந்துவிட்டன.

அளவோடு சுவைத்தால் பிஸ்கெட் போல் நம் வாழ்க்கையும் சுவைக்கும்.ஃபுட் சயின்ஸ்‘நீ என்ன பருப்பா’ என்று கோபத்தில் சிலர் கேட்பார்கள். பருப்பு அவ்வளவு பெரிய பருப்பா என்று கேட்டால், ‘ஆமாம்பா ஆமாம்’ என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். இதற்குக் காரணம் பருப்பில் நிறைந்துள்ள புரோட்டின் எனப்படும் புரதச்சத்து. அந்தப் புரோட்டின் என்பது என்ன என்றுதான் இப்போது சுருக்கமாகப் பார்க்கப் போகிறோம். நம் உடலில் புரோட்டின் இல்லாத இடமே இல்லை. நீருக்கு அடுத்தபடியாக உடலில் நீக்கமற நிறைந்திருப்பது புரதச்சத்துதான். உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலுமே இது அமர்ந்திருக்கிறது. உடலின் ஒவ்வொரு பாகத்தையும் நிறைத்திருப்பது இதுதான். குறிப்பாக, நம்முடைய சதைப்பகுதி என்பது புரதத்தால் நிறைந்ததுதான். முடியிலும், சருமத்திலும்கூட புரதச்சத்து நிறைந்திருக்கிறது.உடல் எனும் கட்டடத்தை உருவாக்கும் செங்கற்கள்தான் திசுக்கள் என்றால் அதில் நிறைந்திருக்கும் செம்மண்தான் புரதங்கள். மேலும், இவையே உடல் இயங்கத் தேவையான ஆற்றலை உருவாக்கும் கார்போ ஹைட்ரேட்களின் அடர்த்தியை வடிவமைப்பதாகவும் உள்ளன.

புரோட்டினின் முக்கியமான பண்புகளில் ஒன்று அதில் இருக்கும் அமினோ அமிலச் சங்கிலித் தொடர்கள். புரதச்சத்து என்பதே இந்த அமினோ அமிலங்களாலான பாலிமர் சங்கிலித் தொடர்கள்தான்.இதில், ஒன்பது வகையான அமினோ அமிலங்கள் உள்ளன என்கிறார்கள். இந்த ஒன்பதின் பெயர்களையும் நாம் உச்சரிக்க முயன்றால் நாக்கு சுளுக்கிக்கொள்ளும் என்பதால் இங்கு அதைச் சொல்லவில்லை. மேலும், உடலில் உள்ள அமினோ அமிலங்கள் ஒன்பதா எட்டா என்பதில் விஞ்ஞானிகளுக்கிடையே இன்னமும் பட்டிமன்றம் நடந்துகொண்டிருக்கிறது. காராணம், ஒன்பதாவது அமினோ அமிலமான ஹிஸ்டிடைன் வளர்ந்தவர்கள் உடலில் காணப் படுவதில்லை என்பதால் ஒரு க்ரூப் அதை முக்கியமான வகைமையாகக் கருதுவதில்லை.பருப்புகள், லெக்யூம்ஸ் எனப்படும் அவரை, பீன்ஸ் போன்ற காய்கறிகள், சோயா, பால், முட்டை, மீன், நட்ஸ் போன்றவற்றில் பல்வேறு வகையான புரதச்சத்துகள் நிறைந்துள்ளன. இதில், சில உணவுகள் லீன் புரோட்டின் எனப்படும். இவற்றை எடுத்துக்கொள்ளும்போது அளவான புரதச்சத்து உடலுக்குக் கிடைக்கும்.

மெசபடோமிய நாகரிக உணவுப் பழக்கங்கள்! மனித குலம் விவசாயத்தைப் பழகி ஆயிரம் வருடங்கள்கூட ஆகியிராத ஆரம்ப காலங்கள் அவை. அதாவது இன்றிலிருந்து ஒன்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு, மத்தியக் கிழக்கில் உருவான ஒரு பழைய நாகரிகம்தான் மெசபடோமிய நாகரிகம். இன்றும் தொல்பொருள் ஆய்வாளர்களும் வரலாற்று அறிஞர்களும் இந்த நாகரிகத்துக்கும் நமது சிந்து சமவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்பை வியந்து பேசிக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பாரம்பரிய நாகரிக மக்கள் உண்ட உணவுகள், அவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.மெசபடோமியாவைப் பொருத்தவரை அங்கு, அக்காடியர்கள், சுமேரியர்கள், பாபிலோனியர்கள், அசாரியர்கள் எனப் பலவகைக் குடிகள் தங்கள் நாகரிகத்தை நிறுவியபோதும், உணவுப் பழக்க வழக்கங்களில் பெரிய மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். எல்லா கலாசாரங்களும் ஒரேவகைப் பயிர்களையும், கால்நடைகளையும்தான் வளர்த்தன. உண்டன. இன்றைய ஈராக், ஜோர்டன், சிரியா ஆகிய பகுதிகளுக்கு இடைப்பட்ட டைக்ரிஸ், யூப்ரடிஸ் நதிகள் பாயும் வளமான பகுதிதான் மெசபடோமியா. இது ஒரு கிரேக்கச் சொல். இந்த நிலப் பகுதியில் முக்கியமாக விளைந்த பொருள் பார்லி. இங்கிருந்த வண்டல் மண்ணுக்கு பார்லி நன்கு விளைந்தது.

ஆடுகள், கோழிகள், பன்றிகளை வளர்க்கும் கால்நடைச் செல்வப் பராமரிப்பு வழக்கமும் இருந்தது. இதனால், பால், வெண்ணெய், நெய், சீஸ் ஆகியவை தயாரிக்கும் பழக்கமும் இம்மக்களுக்கு இருந்தது.
மீன் வளர்ப்பும் ஒரு முக்கியத் தொழில்தான். குளங்களில், ஏரிகளில் மட்டுமின்றி வயல்வெளிகளிலும் மீன் வளர்த்து, அதைப் பிடித்து உண்டனர். சுமார் 50க்கும் மேற்பட்ட மீன் வகைகளை மெசபடோமியர்கள் வளர்த்தனர்.வேட்டையாடும் சமூகத்தவர்களும் இவர்களில் உண்டு. மான் உள்ளிட்ட காட்டு விலங்கு களை வேட்டையாடியும் உண்டிருக்கின்றனர். பார்லியை கூழாக்கிக் குடிக்கும் வழக்கம் இவர் களிடம் இருந்தது. சுண்டல் உள்ளிட்டவற்றையும் கூழோடு சேர்த்துக் குடித்திருக்கிறார்கள். ரொட்டியும் பீரும் இவர்களின் பிரதான உணவாய் இருந்திருக்கிறது.

சமீபத்தில் கண்டறியப்பட்ட அக்காடியர்களின் அகராதி ஒன்றில் 800க்கும் மேற்பட்ட உணவு வகைகள் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. ரொட்டி மட்டுமே 300 வகையாக செய்யப்பட்டிருக்கின்றன. இருபது வகையான சீஸ், நூறு வகையான சூப் என வெரைட்டியாக உண்டு வாழ்ந்திருக்கிறார்கள் இம்மக்கள். இன்னொரு தொல்பொருள் ஆய்வில், காரசாரமான கறிக்குழம்பு, வாத்துக்கறி, காய் கறிப் பொரியல், வறுக்கப்பட்ட டர்னிப்கள், வேகவைக்கப்பட்ட புறாக்கள் ஆகியவை கிடைத்திருக்கின்றன. மெசபடோமியர்கள் வெறுமனே கஞ்சியை, கூழை மட்டுமே குடித்தவர்கள் அல்ல. அசைவம், மீன், பால் பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றோடு பார்லிக் கஞ்சியையும் சேர்த்தே உண்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜெய

Related posts

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தாயகம் வந்தது இந்திய கிரிக்கெட் அணி