சிறுதானியங்களும் கொடுக்கும் பெரும் லாபம்!

விவசாயத்தில் சொல்லிக்கொள்ளும்படி லாபம் இல்லை என பலர் சொல்ல நாம் கேட்டதுண்டு. ஆனால் விவசாயத்தைத் திட்டமிட்டு செய்தால் லாபத்தை நிச்சயம் அள்ளலாம். இதற்கு உதாரணமாகத் திகழ்கிறார் திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புதூர் மாரியம்மன் கோவில் பகுதியைச் சேர்ந்த ரகுபதி என்ற விவசாயி. தனக்கு சொந்தமான நிலத்திலும், குத்தகை எடுத்த நிலத்திலும் சிறுதானியப் பயிர்களையும், பாரம்பரிய நெல் ரகங்களையும் பயிரிட்டு லட்சக்கணக்கில் லாபம் பார்த்துவரும் ரகுபதியை ஒரு காலைப்பொழுதில் சந்தித்தோம். உற்சாகமாக நம்மோடு பேச ஆரம்பித்தார். “ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் வரை படித்திருக்கிறேன். சிறிது காலம் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தேன். எங்கள் ஊரில் நடக்கும் சிறுதானிய கண்காட்சிகளுக்கு அடிக்கடி செல்வேன். சிறுதானிய விவசாயிகளிடம் கலந்துரையாடுவேன். அப்போது அவர்கள் சிறுதானியத்தின் மகத்துவம் பற்றி கூறுவதை கேட்கும்போது எனக்கு மலைப்பாக இருந்தது. இதுகுறித்து வேளாண் உதவி இயக்குநர் கோபால கிருஷ்ணன் என்பவரிடம் பேசினேன். அவர் இயற்கை விவசாயம் மற்றும் சிறுதானிய சாகுபடி குறித்து எனக்கு ஒரு வாரம் பயிற்சி கொடுத்தார். பின்னர் அவர் கூறிய ஒவ்வொரு பகுதிக்கும் சென்று சிறுதானிய பயிர் வளர்ப்பு குறித்த தகவல்களை அறிந்து கொண்டேன். அதுவரை ரசாயன உரங்களைப் பயன்படுத்தி பயிரிட்டு வந்த நாங்கள் இயற்கை விவசாயத்திற்கு மாறினோம். முதலில் 10 சென்ட் நிலத்தில் இயற்கை விவசாயத்தைத் தொடங்கினேன்.

இதில் கிடைத்த அனுபவத்தைக் கொண்டு இயற்கை விவசாயம் மற்றும் சிறுதானிய சாகுபடியை விரிவுபடுத்தினேன். கடந்த 10 ஆண்டாக சிறுதானியப் பயிர்களை சாகுபடி செய்துவருகிறேன். எனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்திலும், அருகில் உள்ள 3 ஏக்கர் நிலத்தை குத்தகை எடுத்தும் இயற்கை முறையில் பாரம்பரிய அரிசிகள் மற்றும் சிறுதானியங்களைப் பயிரிட்டு வருகிறேன். நாட்டு பாசுமதி, வெள்ளை பொன்னி, சீரக சம்பா, ஆத்தூர் கிச்சடி போன்றவற்றை நடவு செய்து அறுவடை செய்தேன். தற்போது வரகு, தினை, குதிரைவாலி, கம்பு போன்ற சிறுதானியங்களையும், கருப்புகவுனி, மாப்பிள்ளை சம்பா, தூயமல்லி, மாப்பிள்ளை சம்பா உள்ளிட்ட நெல் ரகங்களையும் நடவு செய்திருக்கிறேன். இதில் வரகை ஒன்றரை ஏக்கரிலும், குதிரைவாலி, தினை ஆகியவற்றை தலா ஒரு ஏக்கரிலும் பயிரிட்டுள்ளேன். வரகு, குதிரைவாலி 120 நாள் பயிர். தினையை 70 லிருந்து 80 நாளில் அறுவடை செய்துவிடலாம். சிறுதானியங்களைப் பொறுத்தவரையில் ஒரு ஏக்கருக்கு இரண்டரை கிலோ விதைகள் தேவைப்படும். இவை அனைத்தும் மானாவரி பயிர் என்பதால் நிலத்தில் தூவினால் போதும். விதைகளை தூவுவதற்கு முன்பு பெரிய கலப்பை மற்றும் ரொடேவேட்டர் வைத்து 4 முறை உழவு ஓட்டுவேன். பின்னர் இதில் எருவுரமிடுவோம். இரண்டு நாட்கள் நிலத்தில் தண்ணீர் விட்டு நன்றாக ஊற வைக்க வேண்டும். வரகில் முளைப்புத்திறன் அதிகம் இருக்கும். இதனால் அதனை நிலத்தில் நேரடியாக தூவி வளர்ப்போம். இதன்மூலம் நமக்கு நல்ல மகசூல் கிடைக்கும். விதை தூவிய 6 லிருந்து 7வது நாளில் முளைப்பு வரத்தொடங்கிவிடும்.

இதிலிருந்து 25வது நாளில் தேவையில்லாத களைகளை ஆட்களை வைத்து பிடுங்கி எடுப்போம். பிடுங்கிய களையினையும் நன்கு காயவைத்து அரைத்து அதனை நிலத்திற்கு உரமாக இடுவோம். இந்த நேரத்தில் மண்ணை அணைத்து விட்டு எரு உரமிடுவோம். இதனால் பயிர்கள் நன்கு வேர்பிடித்து வளரும். வரகிற்கு அதிகம் தண்ணீர் தேவைப்படாது. அதனால் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்சினால் போதும். பயிர்கள் வளரும்போது 20 நாட்கள் இடைவெளி விட்டு ஜீவாமிர்தம், பஞ்சகவ்யம், மீன் அமிலத்தைத் தெளிப்போம். அறுவடைக்கு 10 நாட்களுக்கு முன்பு தண்ணீர் விடுவதை நிறுத்திவிட வேண்டும். அப்போதுதான் பயிர் காய்ந்து நிலத்தில் இறங்கி அறுவடை செய்வதற்கு ஏதுவாக இருக்கும். 120வது நாளில் அறுவடை செய்வோம். இயற்கை முறையில் விளைவித்த பயிரில் இருந்து எனக்கு 1500 கிலோ வரகு கிடைத்தது. இதில் உமி போக 1200 கிலோ வரகு எடுத்தேன். முன்பெல்லாம் உமியோடு சேர்த்து விற்பனை செய்து வந்தேன். தற்போது வரகை மட்டும் தனியாக பிரித்தெடுத்து விற்பனை செய்கிறேன். இதன்மூலம் ஒரு கிலோ வரகினை ரூ.100 என்ற கணக்கில் விற்பனை செய்கிறேன். 1200 கிலோ வரகில் இருந்து எனக்கு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் ஆட்கூலி, வண்டி வாடகை ரூ.15 ஆயிரம் போக ரூ.1 லட்சத்து 5 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது.குதிரைவாலியை ஒரு ஏக்கரில் பயிரிட்டுள்ளேன். பாத்தி முறையில் விதைத்திருக்கிறேன். விதைகள் முளைத்து வந்த 25வது நாளில் நாற்றாக எடுத்து நிலத்தில் நடவு செய்வேன். வரிசைக்கு வரிசை 25 செ.மீட்டரும், செடிக்குச் செடி 10 செ.மீட்டரும் இடைவெளி இருக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் அதிக மகசூல் கிடைப்பதோடு, பயிரும் சீராக வளரும். நிலத்தில் நாற்றுகளை நடவு செய்த 25வது நாளில் தேவையற்ற களைகளை அகற்றுவோம். பாத்தி முறையில் நடவு செய்ததால் இதில் களைகள் குறைவாகத்தான் இருக்கும்.

குதிரைவாலி 120வது நாளில் அறுவடைக்கு தயாராகிவிடும். களை எடுத்த நாளில் இருந்து ஒவ்வொரு 20 நாட்களுக்கு ஒருமுறை இடைவெளி விட்டு 250 மில்லி பஞ்சகவ்யத்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளுக்கு தெளிக்க வேண்டும். இது நல்ல பயிர் ஊக்கியாக செயல்பட்டு நமக்கு அதிகப்படியான மகசூலைக் கொடுக்கும். ஒரு ஏக்கர் நிலத்தில் இருந்து எனக்கு 820 கிலோ தானியம் கிடைக்கிறது. இதனை வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோ ரூ.100 என்ற கணக்கில் விற்பனை செய்கிறேன். நேரடியாக வியாபாரிகளும் வந்து வாங்கி செல்கிறார்கள். 820 கிலோ குதிரைவாலி மூலம் ரூ.82 ஆயிரம் வருமானமாக கிடைக்கிறது. இதில் ஆட்கூலி பராமரிப்பு செலவு ரூ.8 ஆயிரம் போக ரூ.74 ஆயிரம் லாபமாக கிடைக்கிறது.

இதுபோக ஒரு ஏக்கரில் தினை பயிரிட்டு இருக்கிறேன். இதில் களைகள் குறைவாகவே இருக்கும். இதனால் தினையையும் பாத்திமுறையில் விதை தூவி நாற்றாக எடுத்து நிலத்தில் நடவு செய்வது நல்லது. விதை தூவிய 15வது நாளில் நாற்றாக எடுத்து நிலத்தில் நடுவோம். ஒரு செடிக்கும் மற்றொரு செடிக்கும் இடையில் 20 செ.மீ இடைவெளி இருந்தாலே போதுமானது. விதைத்த 18 முதல் 20வது நாளில் களை எடுத்தல் அவசியம். பின்னர் 40வது நாளில், தேவைப்பட்டால் இன்னொரு முறையும் களை எடுப்போம். இந்தப் பயிரை பொதுவாக பூச்சிகள், நோய்கள் தாக்குவதில்லை. பயிர் பாதுகாப்புக்கு பெரிய அளவில் மெனக்கெடத் தேவையில்லை. 80வது நாளில் தினை அறுவடைக்கு தயாராகிவிடும். கதிர்கள் நன்கு காய்ந்து, இலைகள் பழுத்தவுடன் அறுவடை செய்து களத்தில் காயவைத்து, அடித்து தானியங்களை பிரித்து சுத்தம் செய்வோம். தினை குறைந்த நாள் பயிரே என்றாலும் மகசூல் அதிகம் கிடைக்கும். ஒரு ஏக்கரில் இருந்து 1300 கிலோ தினை மகசூலாக கிடைத்தது. வாடிக்கையாளர்களுக்கு ரூ.100 என்ற கணக்கில் விற்பனை செய்கிறேன். இதிலிருந்து வருமானமாக ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் கிடைத்தது. இதில் ஆட்கூலி மட்டும் ரூ.7 ஆயிரம் போக ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் லாபமாக கிடைத்தது. நிலத்தில் அவ்வப்போது பயிரிடப்படும் பாரம்பரிய அரிசிகளில் இருந்து எனக்கு ஒரு போகத்திற்கு ரூ.3 லட்சம் வருமானம் கிடைக்கிறது. சிறுதானியங்களிலும், பாரம்பரிய நெல் ரகங்களில் பெரிய அளவுக்கு லாபம் இருக்காது என சொல்கிறார்கள். எங்கள் வயலுக்கு வந்து நேரில் பார்த்தால் உண்மை என்னவென்று தெரியும்’’ எனக் கூறி புன்னகைக்கிறார் ரகுபதி.
தொடர்புக்கு:
ரகுபதி: 90926 91541.

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்