சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம்

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிக்கல்வித்துறை மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டியாக ரொட்டிப்பால் வழங்கப்பட்டு வந்தது. தற்போது மாணவர்களுக்கு ரொட்டி வழங்கும் நடைமுறை நிறுத்தப்பட்டு சூடான பால் மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ரொட்டிப்பால் மீண்டும் வழங்க வேண்டும் என அந்த மாநிலத்தின் மாணவர் அமைப்புகள், பெற்றோர் அமைப்புகள் உள்ளிட்டவை கோரிக்கை விடுத்து வருகின்றன. கடந்த 2023ம் ஆண்டில், ஊட்டச்சத்து நிரம்பிய சிறுதானியங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் ஒன்றிய அரசு சிறுதானிய ஆண்டாக அறிவித்தது. இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. இந்த நிலையில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தேவையான ஊட்டச்சத்து கிடைக்கவும், நல்ல ஊட்டச்சத்து மிகுந்த சிறுதானிய சிற்றுண்டி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்திருந்தார். இதற்காக சிறந்த நிறுவனங்களைத் தேர்வு செய்து டெண்டர் கொடுக்கப்பட்டது. இந்த நிறுவனங்களின் மூலம் சுகாதாரமான சிறுதானிய உணவுகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதோடு முதல்கட்டமாக புதுச்சேரி மாநிலத்தில் உள்ள காட்டேரிக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்தத் திட்டத்திற்கான துவக்க விழா நடந்தது.

இதில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு தினை, கேழ்வரகு, சோளம், கம்பு ஆகிய சிறுதானியங்கள் அடங்கிய 20 கிராம் அளவிலான பிஸ்கட் மற்றும் உருண்டையை வழங்கினார். இந்த சிறுதானிய சிற்றுண்டி வாரத்தில் இரண்டு நாட்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் அரசுப்பள்ளிகளில் படிக்கும் மழலையர் முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் என 86 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயனடைவார்கள் என கணக்கிடப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு மாணவருக்கும் 20 கிராம் அளவுக்கு குறையாத சிறுதானிய பிஸ்கட்டுகள் அல்லது உருண்டைகள் வழங்கப்பட இருக்கிறது. முதற்கட்டமாக வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் வழங்கும் வகையில் இந்தத் திட்டம் துவங்கப்பட்டு இருக்கிறது. அதன்பிறகு மாணவர்களின் மனநிலை மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்து திட்டத்தினை விரைவுப்படுத்தி வாரத்தில் 5 நாட்களும் வழங்க ஏற்பாடு செய்யப்பட இருக்கிறது.

Related posts

இங்கிலாந்தில் இந்தியா

20 ஆண்டுகளான காற்றாலைகளுக்கு 5 ஆண்டுகள் நீட்டிப்பு வழங்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.480 உயர்ந்தது