மில்லட் மீல்ஸ் with கொள்ளு ரசம்!

அடையாரில் ஒரு healthy spot

இன்றைய காலக்கட்டத்தில் நாம் ஏதாவது ஒரு புதிய உணவைச் சாப்பிட வேண்டும் என நினைத்தால், உடனே ஆன்லைனில் ட்ரெண்டிங் ஃபுட் எது என ஆண்ட்ராய்டு போன் வழியே தேட ஆரம்பித்துவிடுகிறோம். உலகில் உள்ள பிரபலமான உணவுகள் அனைத்தும் இப்போது நம்ம ஊரில் சந்தைப்படுத்தப்படுகிறது. உலகறிந்த பல உணவுகள் அனைத்து தரப்பினரையும் இன்று வந்தடைந்திருக்கிறது. அதேசமயம் நமது மரபு சார்ந்த பாரம்பரிய உணவுகளை நாம் மெல்ல மெல்ல மறந்துபோனதால், அவை மறைந்துபோகும் நிலை வந்துவிட்டது என்பதும் கசப்பான உண்மையாக இருக்கிறது. தினை அரிசி, மூலிகை ரசம், கீரைக் கரைசல் என இருந்த நமது அன்றாட உணவுமுறை, சில தலைமுறைகளாகவே மாற்றம் கண்டுவிட்டன. மூன்று வேளைச் சாப்பாட்டு முறையில், ஒருமுறையாவது மில்லட் உணவுகளை எடுத்துக்கொண்டால்தான் நமக்குத் தேவையான ஆரோக்கியம் சிறிதளவாது கிடைக்கும். ஆனால் பல வீடுகளில் மில்லட் குக்கிங்கையே மறந்துபோய் விட்டார்கள். ஆனாலும் சிலர் மில்லட் உணவுகளைத் தேடித்தேடிச் சாப்பிடத் துவங்கி இருக்கிறார்கள். இவர்களைப்போன்றவர்களுக்காக இப்போது சென்னை முழுக்க ஆங்காங்கே மில்லட் உணவகங்கள் துவங்கப்பட்டு வருகின்றன.

அவற்றுள், சென்னை அடையார், கஸ்தூர்பாநகரில் இயங்கிவரும் ப்ரேம்ஸ் கிராம போஜனம் என்கிற உணவகம் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடித்திருக்கிறது. மில்லட் பிரியர்களின் விருப்ப உணவகமாக விளங்கும் இந்த உணவகத்தின் உரிமையாளர்கிருஷ்ணமூர்த்தியைச் சந்தித்தோம்.“ சாப்பிடும் உணவில் சுவை எந்த அளவிற்கு முக்கியமானதோ, அதேயளவு ஆரோக்கியமும் முக்கியம். ஆரோக்கியத்திற்காகத்தான் நாம் சாப்பிடுகிறோம். ஆனால், நாம் ஆரோக்கியமான உணவைத்தான் எடுத்துக் கொள்கிறோமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது’’ என அதிரடியாக பேச ஆரம்பித்த கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்து பேசினார்.“நான் கிராமத்தில் வளர்ந்தவன். ஓசூருக்கு அருகில்தான் எனது கிராமம் இருக்கு. சின்ன வயதில் இருந்தே மில்லட் உணவுகள்தான் எனது விருப்ப உணவுகள். வேலைக்காக வெளியூர் சென்றாலும் கூட கிராமத்திற்குச் செல்லும்போது, மில்லட் உணவுகளைத்தான் எடுத்துக்கொள்வேன். மில்லட் உணவில் ஆரோக்கியம் நிறைந்து இருக்கிறது. ஆனால் அவற்றை இன்று பலர் மறந்தே போய்விட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் இரண்டு, மூன்று தலைமுறையாகவே நமது ஊரில் மரபு சார்ந்த உணவுகளை சாப்பிடுவதைக் கைவிட்டு விட்டார்கள். அவற்றின் இடத்தை சைனீஸ் மற்றும் பிறநாட்டு உணவுகள் ஆக்கிரமித்து விட்டது. பாரம்பரியத்தை மறக்காத சிலர்தான் மில்லட் உணவுகளை இன்றளவும் மறக்காமல் பயன்படுத்தி வருகிறார்கள்.

நானும் மரபு உணவுகளை விரும்புபவன் என்ற முறையில், அந்த உணவுகளை மற்றவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டதுதான் இந்த ப்ரேம்ஸ் கிராம போஜனம்.
உணவகத்தை தொடங்கலாமென முடிவெடுத்தவுடன் முதல் வேலையாக ஒன்றைச் செய்தேன். மில்லட் உணவுகள் குறித்த மக்களின் கருத்துகளைக் கேட்டு அறிந்தேன். முதல் ஒரு வருடம் மில்லட் உணவுகள் சார்ந்த புரிதல்கள் மக்களிடையே எப்படி இருக்கிறது என ஆய்வு செய்தேன். இதற்காக பலரிடம் மில்லட் உணவுகளைக் கொடுத்து ரிவ்யூஸ் கேட்டேன். பலருக்கும், அதன் சுவை புதிதாகவும், ஏற்றுக்கொள்ள முடியாத மாதிரியும் இருந்தது. அதே நேரத்தில் ஹெல்த் ஃபுட்ஸ்க்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதையும் தெரிந்து கொள்ள முடிந்தது. இதனால், ஆரோக்கியமான உணவுகளை மக்கள் விரும்பும் சுவையில் கொடுக்கலாமென நினைத்தேன். வாடிக்கையாளர்கள் தினமும் சாப்பிடக்கூடிய சாம்பார் சாதம், தயிர் சாதம், எலுமிச்சை சாதம், மில்லட் பிரியாணி, மில்லட் தோசை, மில்லட் இட்லி, பணியாரம் என தினசரி கிடைக்கக்கூடிய உணவுகளை மில்லட்டில் தயார்செய்து, எனது நண்பர்கள், உறவினர்கள், வீட்டில் இருப்பவர்கள் என அனைவருக்கும் சாப்பிடக் கொடுத்தேன். அவர்களுக்கு சாப்பிட்டதும் பிடித்துப்போனது. இதனால், அதையே உணவகத்தின் ரெசிபியாக மாற்றி உணவகத்தைத்
தொடங்கினேன்.

உணவகம் தொடங்கிய ஆரம்பத்தில் மதியம் மட்டும் மில்லட்டில் காம்போ மீல்ஸ் கொடுத்தேன். பிறகு, வாடிக்கையாளர்களுக்குப் பிடித்த மாதிரி இன்னும் சில ரெசிபிகளை அறிமுகப்படுத்தினேன். முதலில் மில்லட் உணவு சார்ந்த தெளிவு இருக்கும் சிலர் மட்டும் சாப்பிட வந்தார்கள். அதன்பிறகு, இளைஞர்கள் பலர் சாப்பிட வந்தார்கள். அவர்களுக்கு இந்த மில்லட் உணவு பிடித்துப்போகவே ரெகுலர் கஸ்டமர்ஸ்களாக வர ஆரம்பித்தார்கள். இப்போது எனது உணவகத்திற்கு வரக்கூடிய பெரும்பாலானோர்இளைஞர்கள்தான். மதியம் மில்லட் காம்போவில் சிவப் பரிசி கொடுக்க ஆரம்பித்தேன். மூன்று வகையான மில்லட் சாதங்கள் கொடுத்தேன். அதன் கூடவே மில்லட் ரொட்டி என கொடுத்தேன். அதுபோக, மில்லட் மீல்ஸ் கொடுத்தேன். தூயமல்லி அரிசி சாதம், சாம்பார், கூட்டு, பொரியல், ரசம், ஸ்வீட், துவையல் ஆகியவை அடங்கிய மீல்ஸ் கொடுக்கிறேன். வார இறுதியில் சீரகச்சம்பா அரிசியில் சாதம் கொடுக்கிறேன். வாரத்திற்கு 2 முறை சத்து மிகுந்த கீரைகளை மசியல் செய்து கொடுக்கிறேன். கொள்ளு ரசமும் கொடுக்கிறேன். இப்படி ஒவ்வொரு விசயத்திலும் மரபு சார்ந்த உணவுகளில் ஆரோக்கியம் இருக்கும்படிதான் எனது உணவகத்தின் மெனுக்கார்டை தயாரித்து இருக்கிறேன். குழந்தைகளுக்குப் பிடித்த வகையில் மில்லட்டில் பல ஸ்னாக்‌ஸ் டிஷ்சஸ் கொடுத்து வருகிறோம். கீரை வடை, வெஜ் கோலா உருண்டை, நெல் பொரி வடம், ஸ்வீட் பொட்டட்டோ என பல ரெசிபிகள் இருக்கிறது.

கூடவே, குழிப்பணியாரம் இருக்கு. ராகி, சோளம், கம்பு போன்றவற்றில் தயாரித்த ரொட்டிகள் இருக்கின்றன. ஈவ்னிங் உணவாக மில்லட் ஸ்டைல் மினி டிஃபன் கொடுக்கிறோம். அதில், தட்டு இட்லி, குழிப்பணியாரம், பென்னா தோசை என வெரைட்டியாக கொடுக்கிறோம். இது இல்லாமல், மில்லட் தட்டு இட்லி, மில்லட் நார்மல் இட்லியும் கொடுக்கிறோம். மில்லட் பொங்கல், மில்லட் உப்புமாகூட இங்கு கிடைக்கிறது. தோசைகளில் மட்டுமே பல வகையாக வெரைட்டிகள் இருக்கிறது. பொடி தோசை, மசாலா தோசை, நெய் தோசை, பன்னீர்தோசை என பல தோசைகள் இருக்கிறது. கடைக்கு சாப்பிட வருபவர்கள் அவர்களுக்குப் பிடித்த உணவுகளை அதே சுவையில் ஆரோக்கியத்துடன் சாப்பிட்டுச் செல்கிறார்கள். இது எனக்கு மகிழ்ச்சி தரும் விசயமாகவே இருக்கிறது. நல்ல உணவு சாப்பிட வேண்டும், அதை ஆரோக்கியமாக சாப்பிட வேண்டும் என்ற அக்கறை இந்த தலை முறையினரிடம் இப்போது மெல்ல அதிகரித்துவருகிறது. நண்பர்களோடும், குடும்பத்தினரோடும் கூட்டமாக வந்து சாப்பிடுகிறார்கள். அந்தளவிற்கு அவர்கள் ஆரோக்கியத்தைத் தேடி வருகிறார்கள் என்பதுதான் உண்மை. என்னுடைய வேலை என்னவென்றால் எனது உணவகத்தை நம்பி சாப்பிட வருபவர்களுக்கு உண்மையாக இருப்பதும், சத்து மிகுந்த உணவுகளைத் தொடர்ந்து கொடுப்பதும்தான். அதனால்தான், சமையலுக்கு வாங்கப்படுகிற ஒவ்வொரு பொருளும் தரமானதாக இருக்கும்படி பார்த்து வாங்குகிறேன். நம்மிடம் சமையலுக்காக இருக்கும் செஃப்ஸ் கூட நல்ல அனுபவம் வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். உணவு விசயத்தில் நேர்மையாக இருக்கிறேன். அதனால்தான், 10 வருடங்களாக நல்ல உணவுகளை வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க முடிகிறது’’ என மகிழ்ச்சியோடு கூறுகிறார் கிருஷ்ணமூர்த்தி.

ச.விவேக்
படங்கள் – ஆ.வின்சென்ட் பால்

Related posts

ரூ2000க்கு மேல் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு 18% ஜிஎஸ்டி?.. நாளை நடக்கும் கூட்டத்தில் முடிவு

காஷ்மீரில் தேர்தல் விதிகள் மீறல்: 5 அரசு ஊழியர்கள் பணியிடை நீக்கம்

தேர்தலில் சீட் மறுப்பு எதிரொலி: அரியானா மாஜி அமைச்சர் பாஜவுக்கு திடீர் முழுக்கு