லாரி கவிழ்ந்து சாலையில் ஆறாக ஓடிய பால்


திருமலை: டேங்கர் லாரி நடுரோட்டில் கவிழ்ந்தது. இதனால் அதில் இருந்து வழிந்த பால் சாலையில் ஆறாக ஓடியது. இதையறிந்த அப்பகுதி மக்கள் பாத்திரங்களுடன் விரைந்து வந்து பிடித்து சென்றனர். தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடாவில் இருந்து நக்கீரேக்கல்லுக்கு பால் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி நேற்று மாலை சென்றது. மிரியாலகுடா நகரில் உள்ள நந்திபாடு பைபாஸ் சாலையில் உள்ள ஒரு வளைவில் டேங்கர் லாரி திரும்பியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி திடீரென கவிழ்ந்தது. இதனால் டேங்கரில் இருந்த பால் சாலையில் வழிந்து ஆறு போல் ஓடியது.

இதையறிந்த அப்பகுதி மக்கள் பக்கெட், குடம், பாட்டில்களை எடுத்து வந்து போட்டிபோட்டு பாலை பிடித்து சென்றனர். மேலும் தகவலறிந்த அக்கம் பக்கம் பகுதியை சேர்ந்தவர்களும் அங்கு விரைந்து வந்தனர். மக்கள் அதிகளவு கூடியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் கவிழ்ந்து கிடந்த டேங்கர் லாரியை கிரேன் உதவியுடன் மீட்டனர். பின்னர் அங்கு திரண்டிருந்த மக்களை கலைந்து செல்லுமாறு கூறினர். சில மணி நேரங்களுக்கு பிறகு போக்குவரத்து சீரானது. மேலும் விபத்தில் காயமடைந்த டேங்கர் லாரி டிரைவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்