பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்க தலைவர் ஆவின் நிறுவன வளர்ச்சியை கெடுத்து தனியார் ஏஜென்டாக செயல்படுகிறார்: தொழிற்சங்க மாநில செயலாளர் கண்டனம்

அம்பத்தூர்: ஆவின் தொழிற்சங்க மாநில செயலாளர் பரமசிவம் கொரட்டூர் உள்ள ஆவின் பால் பண்ணையில் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: பால் முகவர்கள் தொழிலாளர் நல சங்க தலைவர் பொன்னுசாமி, சமீபத்தில் தமிழ்நாடு ஆவின் நிறுவனத்தை பற்றியும், பால்வளத்துறை அமைச்சர் பற்றியும் ஒரு கருத்தை கூறியுள்ளார். இதுதொடர்பாக, ஆவின் தொழிற்சங்கம் சார்பில் விளக்கம் அளிக்க கடமைப்பட்டுள்ளோம். ஆவின் நிறுவனத்தில் 40 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 4 லட்சம் விவசாயிகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பால் வழங்குகின்றனர்.

திமுக ஆட்சி அமைந்த உடன் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்தது. அதன் விளைவாக ஆவின் பால் விற்பனை அதிகரித்தது. இதன்மூலம் தனியார் பால் விற்பனை குறைந்த காரணத்தால், ஆவின் பால் நிறுவனத்தின் பெயரை களங்கப்படுத்த பொன்னுசாமி, திட்டமிட்டுள்ளார். இவர், பால் முகவரே அல்ல. இவர், பாஜ கைக்கூலி. கடந்த 2022ம் ஆண்டு தீபாவளிக்கு ரூ.116 கோடிக்கு பால் விற்பனையானது. நடப்பாண்டின் தீபாவளிக்கு ரூ.130 கோடிக்கு பால் விற்பனையானது. இது, கடந்த ஆண்டை விட ரூ.14 கோடி அதிகம்.

ஆவின் நிறுவனம் சரியாக இயங்கவில்லை, மக்களுக்கு சேர வேண்டிய தரமான பால் கிடைக்கவில்லை என ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறுவது இவரது வழக்கம். கடந்த ஒரு சில நாட்களில் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது உண்மைதான். கடந்த மாதம் வரை அதிமுக நிர்வாகிகளால் இயக்கப்பட்ட பால் கூட்டுறவு சங்கங்களால் தான் தட்டுப்பாடு ஏற்பட்டது. அவை தற்போது சரி செய்யப்பட்டது. சென்னையில் தற்போது 12 லட்சம் லிட்டர் ஆவின் பால் விற்பனை செய்யப்படுகிறது. பொன்னுசாமி போன்றவர்கள் ஆவின் நிறுவன வளர்ச்சியை கெடுத்து, தனியார் பால் நிறுவனத்திற்கு ஏஜென்டாக செயல்படுவதால், பொய்யான கூற்றுக்களை யாரும் நம்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை