மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக ஓட்டல் தொழிலில் நஷ்டம் உரிமையாளர் தற்கொலை

வேளச்சேரி: மிக்ஜாம் புயல், கனமழை காரணமாக ஓட்டல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அதன் உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வேளச்சேரியில் சோகத்தை ஏற்படுத்தியது. தென்காசியை சேர்ந்தவர் குணபிரியன் (26). இவர், வேளச்சேரி டான்சி நகரில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கி, கடந்த 3 மாதங்களுக்கு முன், கிண்டியில் ஓட்டல் தொடங்கினார். இதற்காக, வங்கி மற்றும் கிரெடிட் கார்டு மூலம் ரூ.25 லட்சம் வரை கடன் பெற்றுள்ளார். இந்நிலையில், கடந்த 4ம் தேதி ஏற்பட்ட மிக்ஜாம் புயல், மழை காரணமாக ஓட்டலில் சரிவர வியாபாரம் நடக்கவில்லை என கூறப்படுகிறது.

இதனால் கடன் தொகைக்கான வட்டி தொகையும் அதிகரித்துள்ளது. கடன் தொல்லையால் மனமுடைந்த குணபிரியன், யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து விடுதி உரிமையாளர் கொடுத்த புகாரின்படி, வேளச்சேரி போலீசார் அங்கு விரைந்து சென்று குணப்பிரியன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்தனர். அதில், கடன் தொல்லையால் குணபிரியன் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுதொடர்பாக, போலீசார் விசாரிக்கின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்