மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களுக்கு கட்டணமின்றி சான்றிதழ்களை வழங்க சிறப்பு முகாம் நடத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: “மிக்ஜாம்” புயல், வெள்ள பாதிப்பினால் சேதமடைந்த அரசு சான்றிதழ்கள், பள்ளி-கல்லூரி சான்றிதழ்களை பொது மக்கள் மற்றும் மாணவர்களுக்குக் கட்டணமின்றி வழங்கிட சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்ய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் “மிக்ஜாம்” புயல் காரணமாக சென்னை மாவட்டத்திலும், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டு, கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் பல்வேறு மீட்பு மற்றும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழை, வெள்ள பாதிப்பினால் குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, பிறப்புச் சான்றிதழ் சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், வாரிசு சான்றிதழ் பள்ளி, கல்லூரிச் சான்றிதழ்கள் உள்ளிட்ட அரசு ஆவணங்களை இழந்தவர்கள், அவற்றை மீண்டும் பெறும் வகையில், அதற்கென சிறப்பு முகாம்களை நடத்தி பொது மக்களுக்கு கட்டணமின்றி அதனை வழங்கிட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதனடிப்படையில், காஞ்சிபுரம் திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட வருவாய் வட்டங்களில், குறுவட்ட அளவிலான சிறப்பு முகாம்கள் வருகிற 11-12-2023 (திங்கட்கிழமை) அன்றும், சென்னை மாவட்டத்தில், சென்னை மாநகராட்சியின் கோட்ட அலுவலகங்களில் வருகிற 12-12-2023 (செவ்வாய்க்கிழமை) அன்றும் தொடங்கப்படும். சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த அறிவிப்பு தொடர்புடைய மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அறிவிக்கப்படும் மேற்படி சிறப்பு முகாம்களில், பொதுமக்களின் வசதிக்கென இ-சேவை மையங்களும் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு