வயநாடு நிலச்சரிவால் வழித்தடம் மாயம்: காட்டு யானைகள் இடம் பெயர்வதில் சிக்கல்

பந்தலூர்: வயநாடு நிலச்சரிவால் வழித்தடங்கள் மாயமாகின. இதன் காரணமாக காட்டு யானைகள் இடம் பெயர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலூர் வனக்கோட்டம் நாடுகாணி, தேவாலா, சேரம்பாடி, பிதர்காடு, வனச்சரகத்திற்குட்பட்ட பகுதிகளான நாடுகாணி, பாண்டியார் எலியாஸ் கடை, சேரம்பாடி டேன்டீ, சேரங்கோடு, காப்புக்காடு, கோரஞ்சால், வாளவயல், தேவாலா அட்டி, சாமியார்மலை, கோட்டப்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 50க்கும் மேற்பட்ட யானைகள் பல நாட்களாக முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் அந்த பகுதியில் தாங்கள் செல்லும் வழித்தடத்தை பயன்படுத்தி வந்தன.

கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் மேப்பாடி சூரல்மலை, முண்டகை பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு நூற்றுக்கணக்கில் மக்கள் நிலச்சரிவில் புதைந்து இறந்தனர். ஒரு மலைப்பகுதியே ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இந்த நிலச்சரிவு காரணமாக யானைகளின் வழித்தடம் மறைந்துபோயின. இதனால் யானைகள் இடம் பெயந்து செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 20க்கும் மேற்பட்ட யானைகள் இடம் பெயர்ந்து செல்லாமல் இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பந்தலூர் சுற்று வட்டார பகுதியில் உள்ள யானைகளும் இடம் பெயர்ந்து செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சேரம்பாடி ரேஞ்சர் அய்யனார் கூறுகையில், ‘‘வயநாட்டில் நிலச்சரிவு காரணமாக யானை வழித்தடத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதால் அந்த பகுதியில் யானைகள் இடப்பெயர்ச்சி செய்வதில் சிரமம் ஏற்படும். ஆனால் பந்தலூர் பகுதியில் உள்ள யானைகளுக்கு இடப்பெயர்ச்சி செய்வதில் எந்தவித பாதிப்பும் இல்லை. இங்குள்ள யானைகள் கேரளா மாநிலம் நிலம்பூர் வனப்பகுதிக்கு சென்று மீண்டும் இப்பகுதிக்கு வந்து முதுமலை பகுதிக்கு செல்லும்’’ என்றார்.

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு