புலம் பெயர்ந்தோருக்கு எதிரான வன்முறை இங்கிலாந்தில் வலதுசாரிகளுக்கு எதிராக போராட்டம்: போலீசார் குவிப்பு

லண்டன்: இங்கிலாந்தில் புலம் பெயர்ந்தோருக்கு எதிராக வன்முறையில் ஈடுபட்ட வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராக நேற்று பொதுமக்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தினர். இங்கிலாந்தில் சவுத்போர்ட் பகுதியில் நடனப் பள்ளியில் கடந்த 29ம் தேதி 3 சிறுமிகள் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக லான்காஷியர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவனை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் 3 சிறுமிகளை கொலை செய்த நபர் இங்கிலாந்தில் அகதியாக குடியேறியவர் என சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

அத்துடன் முஸ்லிம்களுக்கு எதிராகவும் வதந்திகள் பரவியதால், புலம் பெயர்ந்தோருக்கு எதிராக நாடு முழுவதும் தீவிர வலதுசாரி அமைப்பினர் போராட்டங்களில் ஈடுபட்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை பிளாக்பூல், லிவர்பூல், பிரிஸ்டல், லீட்ஸ், ஹல், நாட்டிங்ஹாம், மான்செஸ்டர் உள்ளிட்ட இடங்களில் பெரும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. புலம் பெயர்ந்தோர் தங்கியிருக்கும் உணவு விடுதிகள் அடித்து நொறுக்கப்பட்டதுடன், கடைகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது.

போராட்டக்காரர்களை கலைக்க முயன்ற காவல்துறையினர் மீது கல் வீச்சு சம்பவங்களும் நடந்தன. இந்த வன்முறை தொடர்பாக இதுவரை 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வன்முறை காரணமாக இங்கிலாந்து வரும் இந்தியர்கள் கவனமுடன் இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி இருந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் தீவிர வலதுசாரி அமைப்புகளுக்கு எதிராக போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதனால் கலவரம் ஏற்படுவதை தடுக்க 1,300 சிறப்பு படையினர் நிறுத்தப்பட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. ஆனால் எதிர்பார்த்தப்படி வன்முறை சம்பவங்களின்றி அமைதியான முறையில் வலதுசாரி அமைப்புக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.
லண்டன், பிரிஸ்டல், ஆக்ஸ்போர்டு, பர்மிங்ஹாம் உள்பட பல்வேறு பெரிய நகரங்களில் நடந்த போராட்டங்களில் “அகதிகளை வரவேற்கிறோம், லண்டனில் இனக்கலவரத்தை நிறுத்து” என கோஷங்களை எழுப்பினர்.

Related posts

சித்தூரில் பைக் மோதிய தகராறு வாலிபரை தாக்கிய 4 பேர் கைது

ஜம்மு-காஷ்மீர் இளைஞர்களுக்கு மாதம் ரூ.3,500 வழங்கப்படும்: காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு!!

அருந்ததியினருக்கு பட்டா வழங்க முதலமைச்சருக்கு திமுக எம்.பி. ஆ.ராசா வலியுறுத்தல்