மிக்ஜாம் புயலால் பொதுமக்களுக்கு இடையூறு!: சென்னை தீவுத்திடலில் நடக்கவிருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!!

சென்னை: மிக்ஜாம் புயலால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டிருப்பதால் சென்னை தீவுத்திடலில் நடைபெறவிருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் இந்தியாவின் முதல் முறை நடைபெற உள்ளது. ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயங்களான ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் மற்றும் இந்தியன் ரேசிங் லீக், வருகின்ற டிசம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் சென்னையில் நடைபெற இருந்தது. இந்த பந்தயம் சென்னை தீவுத்திடல் மைதானத்தை சுற்றியுள்ள 3.5 கி.மீ சுற்றளவு சாலைகளில் இரவுப் போட்டியாக நடத்த முடிவு செய்யப்பட்டது.

பந்தயம் தீவுத் திடலில் தொடங்கி அண்ணா சாலை, சிவானந்த சாலை, நேப்பியர் பாலம் வழியாக மீண்டும் தீவுத் திடலில் முடிவடையும். இந்த போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே, தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் போன்ற பகுதியில் 5 நாட்களாக மின்சாரம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மக்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாத சூழலில் கார் பந்தயம் தேவையா? என்று சமூக வலைத்தளங்களில் பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், சென்னையில் வரும் 15, 16 தேதிகள் நடைபெற இருந்த கார் பந்தயம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை தீவுத்திடல் அருகே தீவிர ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், ஃபார்முலா 4 கார் பந்தயம் எந்த தேதியும் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தியதன் விளைவாக கார் பந்தயம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் நடைபெறுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கார் பந்தயம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு சமூக ஆர்வலர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். கார் பந்தயத்தை நடத்துவதற்கு எதிராக ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது நினைவுகூரத்தக்கது.

Related posts

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவுக்கு Late-ஆக வந்தாலும் வரவேற்பு Latest-ஆக உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு