உக்ரைன் போர் விவகாரத்திற்கு மத்தியில்; பிரதமர் மோடி ரஷ்யா பயணம்: ஆஸ்திரியாவும் செல்கிறார்

புதுடெல்லி: பிரதமர் மோடி மூன்று நாட்கள் அரசுமுறை பயணமாக ரஷ்யா, ஆஸ்திரியா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தியா – ரஷ்யா இடையிலான 22வது வருடாந்திர உச்சி மாநாடு வரும் 8, 9ம் தேதிகளில் மாஸ்கோவில் நடக்கிறது. ரஷ்ய அதிபர் புதின் விடுத்த அழைப்பின்பேரில், பிரதமர் மோடி அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார். பின்னர் வரும் 9, 10 ஆகிய தேதிகளில் ஆஸ்திரியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மோடி, அந்நாட்டு அதிபர் அலெக்ஸாண்டர் வான் டெர் பெல்லன், பிரதமர் கார்ல் நெகமர் ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

கடந்த 41 ஆண்டுகளில், ஆஸ்திரியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் மோடி என்று கூறப்படுகிறது. மோடி தனது பயணத்தின்போது, இரு நாடுகளில் வசிக்கும் இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடுகிறார். கடந்த 2019ல் ரஷ்யாவில் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றார். 5 ஆண்டுகளுக்கு பின் இப்போது ரஷ்யாவுக்கு அவர் பயணம் மேற்கொள்கிறார். உக்ரைன் போர் விவகாரத்தில், ரஷ்யா மீது மேற்கத்திய நாடுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ள போதிலும், அந்நாட்டுடன் இந்தியா வலுவான நட்புறவை பராமரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர்களிடம் ‘கூகுள் லொகேஷன்’ கேட்க கூடாது: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு