எம்ஜிஆர் நகரில் மூதாட்டியை கொன்று துண்டு துண்டாக வெட்டி மூட்டை கட்டினர் 9 நாட்களுக்கு பிறகு அடையாறு ஆற்றில் உடல் மீட்பு

* 2 சவரன் நகை, ரூ.50 ஆயிரத்திற்காக நடந்த கொடூரம், கைதான தம்பதி பரபரப்பு வாக்குமூலம்

சென்னை: எம்.ஜி.ஆர். நகரில் மூதாட்டியை 2 சவரன் மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்திக்காக கொடூரமாக கொன்று, உடலை சாக்கு பையில் மூட்டை கட்டி அடையாறு ஆற்றில் வீசிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். 9 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டது. சென்னை எம்.ஜி.ஆர். நகர் மயிலை சிவமூர்த்தி தெருவை சேர்ந்தவர் விஜயா (68), கட்டிட தொழிலாளி. பகுதி நேரமாக ஓட்டலிலும் வேலை செய்தார். இவரது மகள் லோகநாயகி (42). இவர் கணவருடன் வசிக்கிறார்.

இதற்கிடையே கடந்த 17ம் தேதி வேலைக்கு சென்ற விஜயாவை பார்க்க லோகநாயகியின் மகன்கள் வந்துள்ளனர். வெகுநேரம் ஆகியும் பாட்டி வீட்டிற்கு திரும்பாததால், தனது தாய் லோகநாயகிக்கு தகவல் தெரிவித்துள்ளனர். லோகநாயகி, தாய் வேலை செய்யும் ஓட்டல் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விசாரித்துள்ளார். ஆனால் விஜயா அங்கு வரவில்லை என கூறியுள்ளனர். பிறகு கடந்த 19ம் தேதி லோகநாயகி எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், எனது தாய் விஜயா கடந்த 17ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அவரை கண்டுபிடித்து தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

புகாரின்படி எம்ஜிஆர் நகர் போலீசார் மயிலை சிவமூர்த்தி தெருவில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்தனர். அப்போது மூதாட்டி வீட்டிற்கு அருகில் வசிக்கும் பார்த்திபன் (32), அவரது மனைவி சங்கீதா (28) சென்று வந்தது தெரிந்தது. பிறகு 19ம் தேதி அதிகாலை மீண்டும் இருவரும் விஜயா வீட்டிற்கு சென்று மூட்டை ஒன்றை பைக்கில் வைத்துக்கொண்டு, மூட்டை மீது தனது மகளை அமரவைத்து வெளியே செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. இதனால் போலீசார் பார்த்திபனை விசாரணைக்கு அழைக்க அவரது வீட்டிற்கு சென்றபோது, வீடு பூட்டப்பட்டிருந்தது.

எனவே, அவர்கள் மீது சந் தேகம் வலுத்தது. பார்த்திபனின் செல்போன் சிக்னல் உதவியுடன் விசாரித்தபோது, அவர் விருதுநகரில் இருப்பது தெரியவந்தது. போலீசார் விருதுநகர் கிழக்கு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். விருதுநகர் போலீசார் பார்த்திபன், அவரது மனைவி சங்கீதாவை பிடித்து காவல் நிலையத்தில் வைத்தனர். அதேநேரம் சென்னையில் இருந்து தனிப்படை போலீசார் விருதுநகருக்கு சென்று, பார்த்திபன் மற்றும் சங்கீதாவிடம் விசாரித்தனர். அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் வெளியானது.

இது குறித்து தனிப்படை போலீசார் கூறியதாவது: விஜயாவிடம் அடிக்கடி செலவுக்கு பார்த்திபன் பணம் வாங்கியுள்ளார். விஜயா எப்போதும் சுருக்கு பையில் ரூ.20 ஆயிரத்திற்கு குறையாமல் பணம் வைத்திருப்பார். வீட்டிற்கு வரும் பேர பிள்ளைகளுக்கு செலவுக்கு ஆயிரக்கணக்கில் வழங்கி வந்துள்ளார். மூதாட்டி விஜயாவுக்கு, மகள் லோகநாயகி இருந்தாலும், இவர் தனியாக வசித்து வந்தார். கையில் பணத்துடன் மூதாட்டி இருந்ததால் பல நாட்களாக பார்த்திபன் மற்றும் சங்கீதா ஆகியோர் எப்படியாவது பணத்தை நாம் பறிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

பார்த்திபனுக்கு சரியாக வேலை இல்லாததால் குடும்பம் நடத்த கையில் பணம் இல்லாமல் தனது மனைவியுடன் வறுமையில் வாடியுள்ளார். ஒரு கட்டத்தில் மூதாட்டியை மிரட்டி பணத்தை பறித்து விடலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி கடந்த 17ம் தேதி விஜயா வேலைக்கு செல்ல புறப்பட்டபோது, சங்கீதா மற்றும் அவரது கணவர் பார்த்திபன் ஆகியோர், விஜயா வீட்டிற்கு சென்று செலவுக்கு பணம் கேட்டுள்ளனர். ஆனால் விஜயா தன்னிடம் பணம் இல்லை. கொடுத்த பணத்தை கொடுங்கள் என்று கூறியபடி வேலைக்கு செல்ல முயன்றுள்ளார்.

அப்போது பார்த்திபன் உனது சுருக்கு பையில் வைத்திருக்கும் பணத்தை கொடுத்துவிட்டு போ என்று மிரட்டும் பாணியில் கேட்டுள்ளார். இதனால் மூதாட்டி விஜயாவுக்கும் பார்த்திபனுக்கும் இடையே கடும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் பார்த்திபன், விஜயாவின் சுருக்கு பையை பிடுங்கி அதில் இருந்த ரூ.50 ஆயிரம் பணத்தை பறித்துள்ளார். இதனால் சத்தம் போட்ட விஜயாவை, சங்கீதா வாயை இரண்டு கைகளால் பொத்தியுள்ளார். அப்போது வீட்டில் இருந்து இரும்பு கம்பியால் பார்த்திபன் ஓங்கி விஜயாவின் தலையில் அடித்துள்ளார்.

வயது மூப்பு காரணமாக சம்பவ இடத்திலேயே விஜயா மயங்கி உள்ளார். ஆனால் மயக்கம் தெளிந்து எழுந்தால் தங்களுக்கு பிரச்னை வரும் என்று இருவரும் மூதாட்டியின் கழுத்தை வெகு நேரம் நெரித்து துடிதுடிக்க கொன்றுள்ளனர். பிறகு பார்த்திபன் மற்றும் அவரது மனைவி சங்கீதா ஆகியோர் விஜயா காதில் அணிந்து இருந்த ஒரு சவரன் கம்மல், சுருக்கு பையில் வைத்திருந்த ஒரு சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டனர். பிறகு வெளியே தெரியாமல் இருக்க மூதாட்டி வீட்டில் இருந்த சாக்கு பையில் விஜயாவை துண்டு துண்டாக வெட்டி மூட்டை கட்டி அங்கேயே வைத்துவிட்டு ஒன்றும் தெரியாமல் வெளியே வந்துள்ளனர்.

மறுநாள் 18ம் தேதி மாலை பார்த்திபன் தனது வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன் மீண்டும் மூதாட்டி வீட்டிற்கு சென்று மூட்டையில் கட்டி வைத்திருந்த விஜயாவின் உடலை தனது ஸ்கூட்டரின் முன்பக்கம் வைத்துக்கொண்டு சென்றார். சைதாப்பேட்டையில் ஜோன்ஸ் சாலையில் உள்ள அடையாறு ஆற்றில் மூட்டை கட்டி வைத்திருந்த விஜயாவின் உடலை வீசிவிட்டு ஒன்றும் தெரியாதபடி கடந்த 23ம் தேதி தனது சொந்த ஊரான விருதுநகருக்கு ஸ்கூட்டரிலேயே சென்று விட்டனர்.

வறுமை காரணமாக பணம் கடன் கேட்க சென்ற இடத்தில், விஜயாவுடன் ஏற்பட்ட தகராறில் அடித்து கொன்றதாகவும், அதன் பிறகு விஜயா அணிந்து இருந்த 2 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்தை பறித்ததாகவும் விசாரணையின் போது தம்பதியினர் வாக்குமூலம் அளித்ததாக தனிப்படை போலீசார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து, தம்பதியை தனிப்படை போலீசார் அதிரடியாக கைது செய்து நேற்று சென்னைக்கு அழைத்து வந்தனர். பிறகு தம்பதியின் வாக்குமூலத்தின்படி, போலீசார் விஜயா உடல் வீசப்பட்ட அடையாறு ஆற்றில் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் 2 நாட்கள் தேடலுக்கு பிறகு நேற்று காலை உடல் மீட்கப்பட்டது.

அடையாறு ஆற்றில் உடல் வீசப்பட்டு 9 நாட்கள் ஆனதால் மூட்டையில் அழுகிய நிலையில் உடல் இருந்தது. ஆனாலும் பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் விசாரணைக்கு பிறகு பார்த்திபன் மற்றும் சங்கீதா தம்பதியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 2 சவரன் நகை மற்றும் ரூ.50 ஆயிரம் பணத்திற்காக தம்பதி, மூதாட்டியை கொடூரமாக அடித்து கொலை செய்து உடலை மூட்டை கட்டி அடையாறு ஆற்றில் வீசிய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* காணவில்லை என போஸ்டர் ஒட்டிய கொலையாளி
மூதாட்டி விஜயாவுக்காக அவரது மகள் லோகநாயகி எம்.ஜி.ஆர்.நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கும் போது, கொலையாளி பார்த்திபனும் உடன் இருந்துள்ளார். அதோடு இல்லாமல் ‘காண வில்லை’ என மூதாட்டி விஜயாவின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டரை எம்.ஜி.ஆர்.நகர் முழுவதும் உயிரிழந்த விஜயாவின் பேரன்களான குணசேகரனுடன் இணைந்து பார்த்திபன் ஒட்டியுள்ளார்.

மேலும், சிசிடிவி காட்சிகளை பென் டிரைவ் மூலம் பெற்று ஆய்வு செய்த போது, அதில் பார்த்திபன் மூதாட்டியை சாக்கு மூட்டையில் எடுத்து செல்லும் காட்சிகளை தனது நண்பர் மூலம் நீக்கிவிட்டு அதை போலீசாரிடம் விசாரணைக்கு பார்த்திபன் கொடுத்து இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது, அதில் சில நிமிட காட்சிகள் இல்லாததால் சந்தேகமடைந்த போலீசார் மீண்டும் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது தான் பார்த்திபன் சிக்கியுள்ளார்.

* சடலத்துடன் ஸ்கூட்டரில் 4 மணி நேரம் சுற்றினர்
மூதாட்டி விஜயாவை கொலை செய்து கடந்த 18ம் தேதி மாலை 4.30 மணிக்கு உடலை ஒரு சாக்கு மூட்டையில் கட்டி ஸ்கூட்டரில் வைத்து கொண்டு, தனது மனைவி சங்கீதா உடன், உடலை வீச அண்ணாசாலை, தி.நகர், அசோக் நகர் என பல பகுதிகளில் இடம் தேடியுள்ளார். ஆனால் சரியான இடம் கிடைக்கவில்லை. பிறகு 4 மணி நேரம் தேடலுக்கு பிறகு கடைசியாக பார்த்திபன் சைதாப்பேட்டை ஜோன்ஸ் சாலையில் அடையாறு ஆற்றுடன் இணையும் கூவம் கால்வாய் முகத்துவாரத்தில் மூதாட்டியின் உடலை வீசிவிட்டு வந்தது தெரியவந்தது.

பார்த்திபன் மற்றும் அவரது மனைவி சங்கீதா மீது வழிப்பறி மற்றும் முதியவர்களை திசை திருப்பி பணம் பறிக்கும் வழக்குகள் நிலுவையில் இருந்ததை போலீசார் கண்டுபிடித்து, பார்த்திபனை விசாரணைக்கு அழைத்த போது, கடந்த 23ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு தனது மனைவி மற்றும் மகளுடன் விருதுநகருக்கு தப்பி சென்றது தெரியவந்தது.

Related posts

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சொந்தமான 2,000 ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாக அறநிலையத் துறை குற்றச்சாட்டு!

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்