எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு திடீர் பாராட்டு: மோடியின் பெரிய ‘ஐஸ்’; கூட்டணிக்கு போடப்பட்ட துண்டா; அதிமுக வாக்குகளுக்கு வைத்த குறியா?

* அன்று
மோடியா? லேடியா? என கேட்டார் ஜெயலலிதா

* இன்று
அவரை வைத்து ஓட்டு கேட்கும் பிரதமர் மோடி

அனைவருக்கும் பொதுவான தலைவராக இருந்த வாஜ்பாய் பிரதமராக அன்று அப்போது முதல்வராக இருந்த கலைஞர், ஜெயலலிதா ஆதரவு கொடுத்தனர். வாஜ்பாய் ஆட்சி காலம் முடிந்த பிறகு கலைஞர், ஜெயலலிதா மறையும் வரை பாஜவுக்கு ஆதரவு கொடுத்ததில்லை. இந்துத்துவ கொள்கைகளை முன்னெடுத்த பாஜ, தமிழ்நாட்டு நலனுக்கு எதிராக செயல்பட்டதால் அவர்களுக்கு ஆதரவு கொடுக்கவில்லை. அதிமுக ஆட்சியில் மாநில நலனுக்கு எதிராக கொண்டு வந்த மசோதாக்களை ஜெயலலிதா ஆதரவு தரவில்லை. 2014 நாடாளுமன்ற வடமாநிலத்தில் மோடிக்கு ஆதரவான அலை வீசியபோது தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் மோடிக்கு எதிராக பிரசாரம் செய்தனர். அப்போது, நாட்டிற்கு இந்த மோடி வேண்டுமா? இந்த லேடி வேண்டுமா? என்று ஜெயலலிதா கேட்டார். இந்த கோஷம் பேசு பொருளாக மாறியது.

ஆனால், ஜெயலலிதா மறைந்த பிறகு, தங்களது மேல் உள்ள ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்க, பாஜவுடன் கூட்டணி வைத்து மாநில நலனுக்கு எதிராக அதிமுக செயல்பட்டது. அதிகார போட்டியால் அதிமுக பல அணிகளாக உடைந்தது. எடப்பாடி, ஓபிஎஸ், சசிகலா, டிடிவி என பல அணிகளாக பிரிந்து செயல்பட்டனர். ‘ஊரு இரண்டுபட்டால் கூத்தாடி கொண்டாட்டம்’ என்பார்கள். அதிமுக பிளவு பாஜவுக்கு கொண்டாட்டமானது. பஞ்சாயத்து செய்து வைக்கிறேன் என்ற பெயரில் டெல்லி மேலிட தலைவர்கள், அதிமுகவை தலையாட்டி பொம்மைபோல் பயன்படுத்து வந்தனர்.

இதனால், கடைசியாக நடந்த சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி தேர்தல் என 8 தேர்தல்களில் அதிமுக படுதோல்வி அடைந்தது. பாஜவுடன் கூட்டணியை தொடர்ந்தால் நம் எதிர்க்காலம் காணாமல் போய்விடும் என்று எண்ணிய எடப்பாடி பழனிசாமி, பாஜவுடன் கூட்டணியை முறித்து கொண்டு வெளியேறினார். அதே நேரத்தில் அதிமுக ஏணி இல்லாமல் தமிழ்நாட்டில் மேலே ஏற முடியாது என புரிந்து கொண்டு டெல்லி மேலிடம், கூட்டணி பேச்சுக்கு தொடர்ந்து துண்டு போட்டு வருகிறது. கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டேன் என்று எடப்பாடி கூறினாலும், பாஜவுக்கு எதிராக இதுவரை எதுவும் பேசவில்லை. இனி பாஜவுடன் கூட்டணி இல்லை என்று மட்டுமே சொல்லி வருகிறார்.

மாஜிக்கள் மட்டும் அவ்வப்போது அண்ணாமலை விமர்சனத்துக்கு கவுன்டர் கொடுத்து வருகின்றனர். தேர்தல் தேதி அறிவித்த பிறகு அதிமுக-பாஜ கூட்டணி மீண்டும் உருவாகும் என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதனால் அதிமுக-பாஜ மறைமுக கூட்டணி தொடர்கிறதா? என்ற கேள்வி எழுகிறது. இந்ந சூழலில், பல்லடம் மாதப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசினார். கூட்டணி இல்லை என்று முடிவான பிறகு எதிரி கட்சியாக உள்ள அதிமுகவின் மறைந்த தலைவர்கள் புகழ்ந்து பேச ஓட்டு கேட்க மோடிக்கு நிர்பந்தம் ஏன்? அவர் செய்த சாதனைகளை சொல்லி ஓட்டு கேட்க முடியவில்லை.

வழக்கமாக மாற்றுக்கட்சியினரை இழுத்து ஆட்சி அமைக்கும் பாஜவின் ஸ்டைலில் மாற்றுக்கட்சியினர் தலைவர்களை சொல்லி அவர்களின் ஓட்டுகளை கபளீகரம் செய்ய மோடி முயற்சித்தாரா என பல்வேறு கேள்விகள் எழுகிறது. 2016ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்த பிரதமர் மோடி அதிமுக பெரிய ஊழல் கட்சி என கூறி ஜெயலலிதாவை விமர்சனம் செய்திருந்தார். ஆனால், இன்று அவருடைய பெயரை வைத்து மோடி ஓட்டு கேட்கும் பரிதாப நிலைக்கு சென்றுவிட்டார்.
கூட்டணிக்கான கதவுகள் மூடிவிட்டதாக அதிமுக கூறினாலும், கதவுகள் திறந்தே இருப்பதாக அமித்ஷா தெரிவித்திருந்தார். இதன் வெளிப்பாடுதான் பிரதமர் மோடி நேற்று அதிமுக தலைவர்களை புகழ்ந்து பேசியதாக கூறப்படுகிறது.

கூட்டணிக்காக தமிழ்நாட்டில் பெரிய கட்சிகள் யாரும் பாஜ பக்கம் செல்லவில்லை. ஜி.கே.வாசன் மட்டும்தான் சென்றிருக்கிறார். பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் அதிமுக பக்கம் சாய ரெடியாக உள்ளன. இதனால், அதிமுக கூட்டணிக்கு துண்டு போடும் வகையில் மோடி பேசி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் பாஜவுக்கு பாடுபட்ட வாஜ்பாய், அத்வானி போன்ற தலைவர்களை மோடி புகழவில்லை. பாஜவுக்கு வாக்கு வங்கி அதிகரித்துவிட்டது, சக்தி வாய்ந்த தலைவர் மோடி என கூறி வரும் பாஜவினர், அவரையே அவர் முன்னிலைப்படுத்தி பேச தயங்கி ஜெயலலிதா, எம்ஜிஆர் போன்ற தலைவர்களை பயன்படுத்தி ஓட்டு கேட்பதாக அரசியல் விமர்சர்கள் தெரிவித்து உள்ளனர்.

* நீங்க விமர்சனம் செய்றீங்க… பிரதமர் மோடி பாராட்டுறாரு… இனியாவது திருந்துங்க தம்பி: அண்ணாமலைக்கு செல்லூர் ராஜூ அட்வைஸ்
மதுரை மாவட்டம், பரவையில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது: போராடி மட்டுமே ஒன்றிய அரசிடமிருந்து மாநில அரசுகள் உரிமைகளை பெற வேண்டி உள்ளது. பிரதமர் மோடி பேசும்போது 70 ஆண்டு கால திராவிட கட்சிகள் ஆட்சியில் தமிழ்நாடு பின்னோக்கி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார். பாஜ ஆட்சி செய்யும் எத்தனை மாநிலங்கள் முன்னோடி மாநிலமாக உள்ளது? பொருளாதாரத்தில் இன்றுவரை தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது. இயற்கையான கட்டமைப்பு வசதி உள்ளதால்தான் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா சிறப்பாக ஆட்சி செய்ததாக மோடி கூறுகிறார்.

தேர்தலை கருத்தில் கொண்டே எம்ஜிஆர், ஜெயலலிதாவை மோடி வாழ்த்தி பேசுகிறார். கொரோனா காலத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பாக செயல்படுவதாக தெரிவித்த பிரதமர் மோடி, அன்று எடப்பாடியார் பெயரை கூறவில்லை. அது எங்களுக்கு வருத்தமாக உள்ளது. இது தேர்தலுக்கான நடவடிக்கையே. இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதிமுக, பாஜ கட்சிகளிடையே பிரிவு ஏற்பட பிள்ளையார் சுழியே அண்ணாமலை திருவாய் மலர்ந்ததுதான். அவர் ஜெயலலிதாவை பற்றி இழிவாக பேசினார்.

தேவையில்லாத விஷயம் அது. ஜெயலலிதாவை விட அண்ணாமலையின் மனைவி 100 மடங்கு ஆற்றல் மிக்கவர் என்றும், அவருடைய தாய் ஆயிரம் மடங்கு ஆற்றல் மிக்கவர் என்றும் கூறினார். திராவிட ஆட்சிகளால் தமிழ்நாடு பின்னோக்கி சென்று விட்டதாக கூறினார். ஆனால் அவருடைய தலைவரோ, எம்ஜிஆர், ஜெயலலிதா சிறந்த ஆட்சி புரிந்ததாகவும், மக்களுக்கான நல்ல திட்டங்களை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார். மறைந்த திராவிட தலைவர்களை தொடர்ந்து விமர்சித்து வந்ததால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது அவரது தலைவர் மோடி, அண்ணாமலை யாரையெல்லாம் விமர்சித்தாரோ அவர்களை பாராட்டி சென்றிருக்கிறார். இனியாவது தம்பி அண்ணாமலை திருந்த வேண்டும். மறைந்த தலைவர்களை இழிவாக பேசக்கூடாது. இது மாதிரி பேசுவதற்கு இவர் வயதுக்கு தகுதி அல்ல. அவர் அரசியலில் பக்குவப்படவில்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதை, அவருக்கு அகில இந்திய பாஜ தலைமை சொல்லிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் தமிழ்நாட்டு மக்கள், பாஜவை என்றும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு கூறினார்.

* சத்தியமா நம்புங்க மக்களே… மோடி பாராட்டுனதுனால கூட்டணினு நெனைக்காதீங்க… சொல்கிறார் உதயகுமார்
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே குன்னத்தூரில், ஜெயலலிதாவின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக சார்பில் நேற்று நடைபெற்ற ரத்ததான முகாமில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் நடந்த பாஜ பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் தியாகத்தை எடுத்துச் சொன்னார். ஜெயலலிதாவின் தொட்டில் குழந்தை திட்டத்தை அன்னை தெரசாவே பாராட்டியுள்ளார். உலக நாடுகளே பாராட்டிய நிலையில் பிரதமர் மோடி பாராட்டியதில் ஆச்சரியம் இல்லை. இந்த பெருமை அதிமுகவுக்கே சாரும். இதனால், கூட்டணி என்று நினைக்க வேண்டாம். கூட்டணி குறித்து ஏற்கனவே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு மீண்டும் நடைபெறுவதற்கு பிரதமர் மோடியே காரணம் என பாஜ மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். ஜல்லிக்கட்டு பிரச்னை வெற்றி பெற்றதற்கு தமிழக மக்களே காரணம். இதை யாரும் உரிமை கொண்டாட முடியாது. இந்த பிரச்னையில் வெற்றி பெற்று ‘கப்பு’ வாங்கியதைப் போல அண்ணாமலை பேசுகிறார். அந்த கப்பு கடையில் வாங்கியதா? மேடையில் வாங்கியதா? என்ற விவாதம் நடந்து வருகிறது. மேடையில் ‘கப்பு’ வாங்கினால்தான் பொதுமக்கள் பாராட்டுவார்கள். கடையில் ‘கப்பு’ வாங்கி விட்டு மேடையில் வாங்கியதாக சொல்கிறார் அண்ணாமலை. அவரின் இந்த செயல் பொதுமக்களிடம் எடுபடாது. தற்போது வெளிவரும் கருத்துகணிப்புகளை நாங்கள் நம்பவில்லை.இவ்வாறு கூறினார்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை