மேட்டுப்பாளையம் நகராட்சியில் கட்டிடம் கட்ட ரூ.10 லட்சம் லஞ்சமா? அதிகாரிகளை தட்டிக்கேட்ட திமுக கவுன்சிலருக்கு மிரட்டல்

மேட்டுப்பாளையம்: கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி தர அதிகாரிகள் ரூ.10 லட்சம் பெற்றதாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட தன்னை அதிகாரிகள் மிரட்டுவதாக திமுக கவுன்சிலர் குற்றம் சாட்டி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேட்டுப்பாளையம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் நகர்மன்றக்கூட்ட அரங்கில் நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் தலைமையில் நடந்தது. இதில், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, கூட்டத்தில், திமுகவை சேர்ந்த 21வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் நவீன் பேசும்போது, அதிகாரிகள் பாதாள சாக்கடை திட்டத்தில் வீடுகளுக்கு இணைப்பு வழங்க பொதுமக்களிடம் முறைகேடாக பணம் வசூலிப்பதாக புகார் தெரிவித்தார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அலுவலகத்தில் சந்தித்து கேட்டால் தன்னை மிரட்டுவதற்காக சிசிடிவி காட்சிகளை தயார் செய்து புகார் அளிக்க திட்டமிடுவதாக கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர் மற்றும் தலைவரிடம் புகார் தெரிவித்தார். ஏற்கனவே, மேட்டுப்பாளையம் நகராட்சியின் ஆணையாளராக பணியாற்றி பணி மாறுதலாகி சென்ற ஆணையர், கவுன்சிலர்கள் அனைவரும் முட்டாள்கள் என பேசி எதுவாக இருந்தாலும் நான் பார்த்து கொள்கிறேன் என கட்டிடம் கட்டுவதற்கான அனுமதியை பெற ரூ.10 லட்சம் பணம் பெற்றுள்ளதாகவும், அதற்கான ஆதாரம் தன்னிடம் உள்ளதாகவும், இதற்கு அதிகாரிகள் என்ன செய்ய போகிறீர்கள் எனவும் கேள்வி கேட்டார். திமுக கவுன்சிலரின் இந்த பேச்சைக்கேட்டு எதிர்க்கட்சியான அதிமுக கவுன்சிலர்களும் கூட கைதட்டி வரவேற்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

தமிழ் வழி கல்வியில் பயின்றதாக போலி சான்றிதழ் பெற்று அரசு பணியில் சேர்ந்த 4 அதிகாரிகள் உட்பட 9 பேர் மீது வழக்கு

விமானத்தில் பெண் பயணி மாரடைப்பால் உயிரிழப்பு

டன் கணக்கில் கிடைக்கும் மீன்கள்: கரை திரும்ப முடியாமல் தவிக்கும் கடலூர் மீனவர்கள்