மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அருகே உடல் நலம் பாதித்த யானையை வனத்துறையினர் 3வது நாளாக தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை கூத்தா மண்டிபிரிவு பகுதியில் தனியாருக்கு சொந்தமான நிலத்தில் நேற்று முன்தினம் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு 17 வயது ஆண் யானை ஒன்று நின்றிருப்பதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் விரைந்து சென்று யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் யானை அப்பகுதியை விட்டு வெளியேறாமல் மீண்டும் அதே பகுதியில் சுற்றி வந்தது.
இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனகால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் ஆய்வு செய்தனர். இதில், யானையின் உடலில் காயம் இல்லாததால், உள் உறுப்புகளில் ஏதேனும் பிரச்னை இருக்கலாம் என முடிவு செய்து தர்பூசணி, வாழைப்பழம் மூலம் ஆன்ட்டிபயாட்டிக் மாத்திரை, வலி நிவாரணி மாத்திரைகள், குடற்புழு மாத்திரைகள் மற்றும் கல்லீரல் புத்துணர்வு வைட்டமின் டானிக் உள்ளிடவைகளை கொடுத்தனர். அவற்றை யானை முழுவதுமாக உட்கொண்டது. 2வது நாளாக நேற்று மருத்துவ குழுவினர் யானையை தீவிரமாக கண்காணித்தனர். இதில் யானை சுமார் 300 மீட்டர் தூரம் நடந்து சென்ற அருகில் உள்ள குட்டையில் தண்ணீர் அருந்தியது. தொடர்ந்து யானைக்கு சாதத்தில் வெல்லம், புளிச்சாறு, தேங்காய்த்துருவல், மாத்திரைகளை பவுடர்களாக செய்து அதனுடன் கல்லீரல் டானிக்கை கலந்து கவளங்களாக பிடித்து வாழை இலையில் வைத்து கட்டி யானை அருகே வைத்தனர். மேலும், தர்பூசணி,வாழை, முலாம் பழங்களில் ஆன்ட்டிபயாட்டிக்,வலி நிவாரண மாத்திரைகள், கல்லீரல் புத்துணர்வு மாத்திரைகளை வைத்து வழங்கினர்.
தொடர்ந்து யானைக்கு கரும்பு, மக்காச்சோள தட்டை உள்ளிட்ட தீவன பயிர்களை வழங்கினர். இவற்றை சாப்பிட்ட யானை சற்று உடல் நலம் தேறிய நிலையில் அருகில் உள்ள தோட்டத்துக்கு நடந்து சென்றது. இந்த நிலையில் தொடர்ந்து 3வது நாளாக வனச்சரகர் மனோஜ் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வனக்கால்நடை மருத்துவர் சுகுமார் தலைமையிலான மருத்துவக்குழுவினர் யானையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.


