மேட்டுப்பாளையம் பகுதியில் சூறாவளி காற்று, கனமழையால் வாழை மரங்கள் சேதம்: கலெக்டர், எம்எல்ஏ ஆய்வு

காரமடை : மேட்டுப்பாளையம் பகுதியில் சூறாவளி காற்று, கனமழையால் சேதமடைந்த வாழை, தென்னை மரங்களை கலெக்டர் கிராந்தி குமார் பாடி, எம்எல்ஏ ஏகே செல்வராஜ் நேரில் ஆய்வு மேற்கொண்டனர் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான சிறுமுகை, காரமடை, தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 21ம் தேதி சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சிறுமுகை, காரமடை, தேக்கம்பட்டி, வெள்ளியங்காடு, தோலம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த பல்லாயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து நாசமாயின. இதனால் விவசாயிகள் பெரும் கவலையில் ஆழ்ந்தனர்.

இந்நிலையில் கோவை மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் பாடி நேற்று வெள்ளியங்காடு, தேக்கம்பட்டி ஊராட்சிகளுக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றால் சேதமடைந்த பயிர்களை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வட்டாட்சியர் சந்திரன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சுசீந்திரா உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்தாலோசனை மேற்கொண்டார். மேலும், சேதமடைந்த பயிர்களை கணக்கீடு செய்யும் பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளிடம் கலெக்டர் அறிவுறுத்தினார்.

பின்னர், கலெக்டர் கிராந்திகுமார் பாடி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மேட்டுப்பாளையம் வட்டத்தில் கடந்த 21ம் தேதி மாலை 5 மணி அளவில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக 13 கிராமங்களிலும், அன்னூர் வட்டத்தில் 4 கிராமங்களிலும் பயிர்கள் சேதமடைந்துள்ளது. மேட்டுப்பாளையத்தில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழை காரணமாக பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை, தென்னை உள்ளிட்ட 1.46 லட்சம் மதிப்பு மரங்கள் சேதமடைந்துள்ளது என வருவாய் மற்றும் தோட்டக்கலை துறையினர் கணக்கீடு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளிடம் பட்டா, சிட்டா அடங்கல், வங்கி கணக்கு விபரம் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.

வருவாய்த்துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறையினரின் உதவியுடன் சேத மதிப்பீடு கணக்கீடு செய்யப்பட்டு அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். பின்னர் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும். விவசாய பயிர்கள் சேதம் அடைவதை தவிர்க்க காப்பீடு ஒன்று மட்டுமே நிரந்தர தீர்வு. அதில் சில சிக்கல்கள் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். சிக்கல்களை களைய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

மேலும், காரமடை வட்டாரத்தில் கனிம வளக்கொள்ளை நடைபெற்று வருவது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த கலெக்டர், சட்ட விரோத கனிம வளக்கொள்ளை குறித்து சிறப்பு குழு மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுவினர் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், கனிம வளக்கொள்ளையில் ஈடுபடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

அப்போது மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ், வெள்ளியங்காடு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயமணி, கெம்மாரம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி நிர்மலா பொன்னுசாமி, துணை வட்டாட்சியர் பாலமுருகன், வருவாய் ஆய்வாளர்கள் சசிகுமார், வெங்கடேஷ், துணை தோட்டக்கலை அலுவலர் சேகர், உதவி தோட்டக்கலை அலுவலர்கள் கருப்புசாமி, சரவணகுமார், சுகேந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் மூர்த்தி, சரண்யா உள்பட அரசுத்துறை அதிகாரிகள், விவசாயிகள் உடன் இருந்தனர்.

Related posts

அடையாளம் தெரியாத வாகனம் மோதி இருவர் பலி

சென்னை அருகே பீர்க்கன்கரணையில் இரட்டைக் கொலை

ஜூலை-02: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை