மின் விநியோக கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு: பயணிகள் அவதி

திருவொற்றியூர்: விம்கோ நகர் பணிமனையில் மின் விநியோக கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. தாமதமாக ரயில்கள் இயக்கப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னையில் விமான நிலையம் – விம்கோ நகர், பரங்கிமலை – சென்னை சென்ட்ரல் ஆகிய 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. அதிகாலை 5 மணி முதல் இரவு 11.30 மணி வரை இந்த ரயில் சேவை இயக்கப்பட்டு வருவதால் பொதுமக்கள் அதிகளவில் இதில் பயணித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று அதிகாலை 5 மணியளவில் விம்கோ நகர் மெட்ரோ நிலையம் மற்றும் விம்கோநகர் டெப்போ நிலையம் இடையே மின் விநியோக கோளாறு காரணமாக மின் வினியோகத்தில் தடை ஏற்பட்டது. இதனால் மெட்ரோ ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. விம்கோ நகர் பணிமனை மெட்ரோ நிலையம் தான் கடைசியாகும். திடீரென மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதால் மெட்ரோ ரயில்களை இயக்க முடியாமல் போனது. இதனால் விம்கோ நகர் பணிமனை நிலையம் – விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. விம்கோ நகர் நிலையத்தில் இருந்து சுங்கச்சாவடி நிலையம் வரை ஒரு வழிப்பாதையில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டன. மற்றொரு பாதையில் சேவை இயக்க முடியாது, என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்தது. 18 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் அங்கிருந்து இயக்கப்பட்டன.

மெட்ரோ ரயில்கள் காலை நேரங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு சேவை வீதம் இயக்கப்படும். ஆனால் மின்சார தொழில் நுட்ப கோளாறால் குறைந்த அளவில் அதிக இடைவெளியில் ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. விம்கோ நகர் நிலையத்தில் இருந்து திருவொற்றியூர், தேரடி, காலடிப்பேட்டை சுங்கச்சாவடி நிலையம் வரை ஒரு வழிப்பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால் வட சென்னை பகுதியில் இருந்து சென்ட்ரல், கோயம்பேடு, வடபழனி, அசோக்நகர் மற்றும் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, விமான நிலையம் செல்லக்கூடியவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். இதற்கிடையில் மின் வினியோக கோளாறை சரி செய்யும் பணியில் தொழில் நுட்ப பணியாளர்கள் ஈடுபட்டனர். ஆனாலும் அதனை சரி செய்து இயல்பான சேவையை தொடங்க 4 மணி நேரம் நீடித்தது. காலை 9.30 மணி முதல் போக்குவரத்து சீரானது. இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், வேலைக்கு செல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் இந்த தொழில்நுட்ப கோளாறு எப்போது சரியாகும் என எந்த அறிவிப்பும் மெட்ரோ நிர்வாகத்தால் வெளியிடப்படாததால் பயணிகள் குழம்பினர். இதனால் விம்கோ நகர் பணிமனைக்கு வந்த பல பயணிகள் பின்னர் அங்கிருந்து வேறொரு வாகனம் மூலம் அடுத்த நிறுத்தத்திற்கு வரவேண்டிய அவல நிலை ஏற்பட்டது. பின்னர் காலை 9 மணிக்கு இயந்திரக் கோளாறு சரி செய்யப்பட்டு 4 மணி நேரத்திற்குப் பின் விம்கோ நகர் பணிமனையில் இருந்து மீண்டும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டது,’’ என்றனர்.

Related posts

சிறுமி திருமணம் தடுத்து நிறுத்தம்: 5 பேர் மீது வழக்கு

சவுக்கை செடிகளை பிடுங்கிய 4 பேர் மீது வழக்கு பதிவு

கணவன் மாயம்: மனைவி புகார்