மெட்ரோ ரயில் பணிக்கு வடமாநிலங்களுக்கு ரூ.4 ஆயிரம் கோடி, தமிழகத்துக்கு 4 ரூபாய் கூட வழங்கவில்லை: ஒன்றிய அரசு மீது அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

பெரம்பூர்: வட மாநிலங்களில் மெட்ரோ ரயில் அமைக்க ரூ.4 ஆயிரம் கோடி வாரி வழங்கிய ஒன்றிய அரசு தமிழகத்திற்கு 4 ரூபாய் கூட தரவில்லை என்று அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டினார். சென்னை கிழக்கு மாவட்டம் திரு.வி.க நகர் தெற்கு பகுதி 76வது வட்டம் சார்பில் திமுகவின் 75வது பவள விழாவை முன்னிட்டு திராவிட தத்துவம்.. தீராத லட்சியம் என்ற தலைப்பில் பொதுக்கூட்டம், சென்னை ஓட்டேரி பிரிக்கிளின் சாலை சந்திப்பு, வெங்கட்டம்மாள் சமாதி தெரு பகுதியில் நேற்று மாலை நடந்தது. 76வது வட்ட செயலாளர் சசிகுமார் ஏற்பாடு செய்திருந்தார். அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ், திராவிடர் கழக பிரசார செயலாளர் வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் சிறப்புரையாற்றினர். தாயகம் கவி எம்எல்ஏ, வர்த்தக அணி அமைப்பாளர் லயன் உதயசங்கர், பகுதி செயலாளர்கள் சாமிக்கண்ணு, தமிழ்வேந்தன், 76வது அ வட்ட செயலாளர் வெங்கடேசன் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பீட்டர் அல்போன்ஸ் பேசுகையில், ‘தமிழ்நாடு மட்டுமின்றி அமெரிக்கா வரை செல்லும் இடமெல்லாம் சமூக நீதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் மிக அழுத்தமாக தெளிவாக பரப்பி வருகிறார். திமுகவின் தத்துவமும் சித்தாந்தமும் இன்றளவும் அதிகமாக தேவைப்படுகிறது. தமிழ்நாட்டில் ஆட்சியை நடத்தி வரக்கூடிய முதல்வர், டெல்லிக்கு கடன் கேட்கவோ யாசகம் கேட்கவோ செல்லவில்லை. நமது உரிமை தொகையை கேட்கதான் சென்றுள்ளார். மதவாத பாஜ தத்துவத்துடன் ஒத்து போவாதவர்கள், மாநில உரிமைகளை கேட்பவர்கள், சமூக நீதிக்கு குரல் கொடுப்பவர்கள் மீது பாஜ வழக்குகளை போட்டு சிறையில் அடைத்து அடக்குவதற்கு முயற்சி செய்து வருகிறது’ என்றார். அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது: திராவிட தத்துவம் என்பது என்றைக்கும் தீராத ஒன்று.

சமூகநீதி, சுயமரியாதை என அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யும்பட்சத்தில் இவற்றிற்கு தீர்வு ஏற்படும். ஆனால் திராவிட தத்துவம் காலத்திற்கு ஏற்ப பல வடிவங்களாக மாறிக்கொண்டேதான் செல்கிறது. அன்றைய காலகட்டத்தில் இந்தியாவின் வரலாறை திருத்தி எழுதுவதற்காக அமைக்கப்பட்ட குழுவில் ஒரு சிலரை தவிர அனைவருமே பிராமணத்தை சேர்ந்தவர்கள்தான். அவர்கள் தவறே செய்தாலும் தவறு இல்லை என்றும் பிற ஜாதியை சேர்ந்தவர்கள் சரியாக செய்தாலும் அதை தவறு என்றும் சித்தரிக்கக்கூடிய கூட்டம் உள்ளவரை திராவிட கொள்கையும், சித்தாந்தமும் என்றைக்கும் தேவைப்படக்கூடிய ஒன்று. சாதி ரீதியாக பொதுமக்களை துன்புறுத்தியபோதும் உரிமைகள் பறிக்கப்பட்டபோதும் குரலை மேலோங்கி ஒலிக்க செய்தவர் பெரியார். அவரது தொண்டு மிகவும் சிறப்பானது.

சுயமரியாதையும் சமூக நீதியும் சமத்துவமும் உள்ளவரை திராவிட இயக்கம் கொள்கையும் தத்துவமும் இருக்கும். தமிழகத்தை தவிர பிற மாநிலங்களில் பல கட்சிகள் தொடங்கப்பட்டு காணாமல் போய் உள்ளது. வடமாநிலங்களில் மெட்ரோ ரயில் அமைக்கும் பணிக்காக ரூ.4 ஆயிரம் கோடியை ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்கு 4 ரூபாய் கூட கொடுக்கவில்லை. நமது உரிமை தொகையை கேட்டு பெறுவதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்றுள்ளார். கலைஞர் யாருக்கும் இதுவரையில் அஞ்சியது கிடையாது. அஞ்சா நெஞ்சம் கொண்டவர். அவரது வழியில் வந்த தளபதியும் அதே போன்றவர்தான். கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒரு முதல்வருக்கும் இல்லாத ஒரு பெருமையை அவர் பெற்றுள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

471 நாட்கள் சிறைவாசம் முடித்து வெளியே வந்துள்ள செந்தில் பாலாஜியை வரவேற்போம்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு

தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கை பரிசீலிக்கப்படும்: சாம்சங் நிறுவனம்

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திப்பு