மெட்ரோ ரயில் மாநில அரசு திட்டமாம்… புதுவிளக்கம் கொடுக்கும் நிர்மலா சீதாராமன்

கோவை: கோவை தனியார் ஓட்டலில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிருபர்களிடம் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் ஒன்றிய அரசின் மூலம் மேற்கொள்ளப்பட்டது. 54 கிலோ மீட்டர் இரண்டு லைன் திட்டம். தினமும் 4 லட்சம் பேர் பயணிக்கின்றனர். ஆனால், சென்னை மெட்ரோ இரண்டாவது பேஸ் திட்டத்தில் 118 கிலோ மீட்டர் 3 லைன் திட்டம். இது மாநில அரசின் திட்டம். 2018ல் இதனை மாநில அரசு ஒப்புக்கொண்டது. இதற்கு ஒன்றிய அரசின் பங்கு என்பது 10 சதவீதம் தான். இதற்காக வாங்கும் மொத்த கடனும் மாநில அரசு உடையது. இதன் மொத்த மதிப்பு ரூ.63,246 கோடி ஆகும்.

இதில், ரூ.33,593 கோடி வங்கி கடனில், ரூ.21,560 கோடி பெற்றுத்தரப்பட்டுள்ளது. இதில், தற்போது வரை ரூ.5,780 கோடி மட்டுமே பணி நடந்துள்ளது. பணம் கொடுக்கவில்லை என எப்படி கூறலாம். கோவை மெட்ரோ ரயில் திட்டம் பற்றி எனக்கு தெரியாது. ராகுல்காந்தி வெளிநாட்டில் சுதந்திரம் இருக்கிறது என்பதற்காக அங்கு சென்று பாரத வெளிநாட்டில் நமது நாட்டிற்கு எதிரானவர்களை சந்தித்து எதிர்கட்சி தலைவர் பேசியது சரியா? எதிர்கட்சி தலைவராக ராகுல்காந்தி இருப்பது கேடுகாலம். இவ்வாறு அவர் கூறினார்.

நிர்மலா சீதாராமன் பேட்டியின்போது, தமிழக பள்ளிகளில் கொலை, சாலையில் சாதி கலவரம் நடக்கிறது என அவர் கூறியபோது, மணிப்பூர் பற்றி பேசுறீங்களா? என ஒரு நிருபர் கேள்வி கேட்டார். அப்போது ஆவேசமடைந்த நிதியமைச்சர், ‘‘மணிப்பூர் விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியிடம்தான் நீங்கள் கேள்வி கேட்க வேண்டும்’’ என நிருபரை சாடினார். தொடர்ந்து, ‘‘ஸ்வீட்டுக்கு 5 சதவீதம், காரத்துக்கு 12 சதவீதம், கிரீமுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது’’ எனவும், ‘‘பில் போட கம்ப்யூட்டரே திணறுகிறது’’ எனவும் அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன் பேசியது குறித்து நிருபர்கள் கேட்டபோது,‘அவர் பன்னுக்கு வரி இல்லை. கீரிம் போட்டால் வரி என ஜனரஞ்சகமான வார்த்தையில் கேள்வி எழுப்பினார். அதில் தவறு இல்லை. ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரையின் பேரில்தான் வரி விதிக்கப்படுகிறது. ஜனரஞ்சகமாக அவர் பேசுவதால் ஊறுகாய் மாமியை கேள்வி கேட்டுவிட்டார் என கூறலாம். அதுபற்றி எனக்கு கவலையில்லை’ என்றார்.

Related posts

மதுரை விடுதி தீ விபத்தில் வார்டனும் சாவு

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது

பைக்-லாரி மோதல் ஒரே குடும்பத்தில் 2 சிறுமிகள் உள்பட 4 பேர் பரிதாப பலி