சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ₹150 கோடி மதிப்பீட்டில் திட்டப் பணிகள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 150 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பேருந்து நிலையம், மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் இரத்த சுத்திகரிப்பு மையம், உள்விளையாட்டு அரங்கம், பூங்கா, பேருந்துநிலையம் மற்றும் காசிமேடு கடற்கரை பகுதியை மேம்படுத்தும் பணி ஆகிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

சென்னைப் பெருநகரப் பகுதியின் வளர்ச்சியை ஒழுங்குபடுத்துவதற்கு விரிவான திட்டமிடல் தேவை என்பதை உணர்ந்து 1972-ல் மெட்ராஸ் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் என்ற பெயரில் தற்காலிக அமைப்பாக இருந்து, பின்னர் 1975-ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர் மற்றும் ஊரமைப்புச் சட்டம், 1971-ன் கீழ் சட்டப்பூர்வ குழுமமாக மாற்றப்பட்டது. சென்னைப் பெருநகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் எதிர்கால தேவைகளைக் கருதி பெருகிவரும் மக்கள் தொகைகேற்ப கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், அரசின் நகர்ப்புற மேம்பாடு மற்றும் பெருநகரத் திட்டமிடல் தொடர்பான கொள்கை முடிவுகளை செயல்படுத்துதல், நிலவகைப்பாடுகளில் உபயோக மாற்றங்களை முழுமைத் திட்டம் மற்றும் விரிவான வளர்ச்சித் திட்டங்களை அமல்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், வெண்பாக்கத்தில் 97 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய பேருந்து நிலையம், அம்பத்தூர் பேருந்து நிலையத்தில் 13.85 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையத்தை மேம்படுத்தும் பணி, கொண்டித்தோப்பில் 11.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு மையம் மற்றும் இரத்த சுத்திகரிப்பு மையம், கோயம்பேடு சாலை சந்திப்பில் 10.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள இயற்கை வனப்புடன் புதிய பூங்கா, மயிலாப்பூர், முண்டகக் கண்ணியம்மன் கோயில் அருகில் பெருநகர சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானத்தில் 8.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய உள்விளையாட்டு அரங்கம் மற்றும் காசிமேடு கடற்கரை பகுதியில் 8.65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடற்கரை பகுதியை மேம்படுத்தும் பணி; என மொத்தம் 150 கோடியே 5 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள திட்டப் பணிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், அறநிலையத் துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவருமான சேகர்பாபு, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலாளர் சமயமூர்த்தி, சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சூல் மிஸ்ரா, ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related posts

சென்னை மெரினாவில் நடைபெற்ற வான் சாகச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, உடல்நலன் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5-ஆக உயர்வு

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு