மெட்ரோ நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி எங்கே? : தமிழ்நாடு அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சென்னை: இரண்டாம் கட்டமாக கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் நிலையங்கள், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் அமைக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது. மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்தள வசதி ஏற்படுத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி வைஷ்ணவி ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.இந்த வழக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் யோகேஷ்வரன், மெட்ரோ நிலையங்களில் சாய்தள வசதிகள் அமைக்கப்பட்டதாக கடந்த 2017ல் அறிக்கையில் தெரிவித்தது. ஆனால், 2020ல் வெளியிடப்பட்ட கூடுதல் அறிக்கையில் 40 சதவிகிதம் மட்டுமே முடிவடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. சக்கர நாற்காலிகள் இருந்தும் மாற்றுத்திறனாளிகளால் ரயில் நிலையத்தை பயன்படுத்த முடிவதில்லை என்றார்.

அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ் ராமன், தற்போது இரண்டாம் கட்ட மெட்ரோ கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. ஏற்கனவே உள்ள ரயில் நிலையங்களில் ரயில் பெட்டிகள் மற்றும் நடைமேடைகளுக்கு இடையேயான இடைவெளியை குறைக்க மாற்றம் செய்தால் ஒட்டுமொத்த கட்டுமானமும் பாதிக்கப்படும். எனவே இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அனைத்து வசதிகளுடன் கட்டப்படும் என்றார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், இது குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related posts

தமிழகத்தில் இரவு 8.30 மணி வரை 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இணையதளம் முடக்கம்

பாஜ மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி!