மெட்ரோ, புறநகர் மற்றும் பறக்கும் ரயில் சேவையை இணைத்து பரங்கிமலையில் புதிய ரயில் முனையம்: இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்

சென்னை: மெட்ரோ ரயில், புறநகர் மின்சார ரயில் மற்றும் பறக்கும் ரயில் சேவைகளை இணைத்து, பரங்கிமலையில் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் புறநகர் மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல், சென்னை கடற்கரை – வேளச்சேரி வரை பறக்கும் ரயில் சேவை இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேவையை பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர், அரசு மற்றும் தனியார் துறையில் வேலைக்கு செல்வோர், கூலி தொழிலாளர்கள் என தினசரி லட்சக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தட பறக்கும் ரயில் சேவையை பரங்கிமலை வரை 5 கிலோ மீட்டருக்கு நீட்டிக்கும் பணி, ரூ.495 கோடி செலவில் கடந்த 2008ல் தொடக்கப்பட்டது. இந்த பணிகள் தற்போது 90 சதவீதம் வரை நிறைவடைந்தது. ஆனால் ஆதம்பாக்கம் – பரங்கிமலை இடையிலான 500 மீட்டர் தூர பணியில் நிலம் கையகப்படுத்துவதில் பிரச்னை ஏற்பட்டது. இதன் காரணமாக தொய்வு ஏற்பட்டு கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளாக இந்த பணி கிடப்பில் போடப்பட்டது. இந்தநிலையில், திமுக ஆட்சி பொறுப்பேற்றபின் கிடப்பில் போடப்பட்ட ஆதம்பாக்கத்தில் இருந்து 500 மீட்டருக்கான பறக்கும் ரயில் திட்டப் பணிகள் சூடுபிடித்துள்ளது.

இதற்காக தில்லை கங்கா நகர் பகுதியில் தூண்கள் அமைக்கப்பட்டு, மேம்பால இணைப்பு பணிகள் மற்றும் பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணிகளும் முடிந்துவிட்டன. இதனையடுத்து மீதமுள்ள பணிகளையும் விரைந்து முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரயில்வே பாதுகாப்பு ஆணையரகத்தின் ஒப்புதல் பெற்று, விரைவில் இந்த வழித்தடத்தில் ரயில் சேவையை தொடங்க ரயில்வே அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இதற்காக, சென்னை கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் உள்ள பரங்கிமலை ரயில் நிலையம் அருகே பணிமனை அமைக்கப்படுகிறது.

இதன்மூலம், தாம்பரம் மற்றும் கிண்டி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வேளச்சேரி செல்பவர்கள் பரங்கிமலை ரயில் நிலையத்தில் இருந்து எளிதாக சென்று விட முடியும். தற்போது, மயிலாப்பூர் மற்றும் சுற்றுப் பகுதிகளை சேர்ந்தவர்கள் தாம்பரம் ரயிலில் தாம்பரம் மார்க்கமாக செல்ல வேண்டுமெனில், பார்க் டவுன் அல்லது கோட்டை ரயில் நிலையம் சென்று தான் செல்ல முடியும். இதனால், கால விரையம் ஏற்படுகிறது. இந்நிலையில், வேளச்சேரி – பரங்கிமலை ரயில் சேவை தொடங்கப்பட்டால், ஏராளமானோர் பயன்பெறுவர். இதேபோல், சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை வரை தற்போது மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படுகிறது. இதனை ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தாம்பரம் – கடற்கரை புறநகர் மின்சார ரயில், சென்னை கடற்கரை – பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை மற்றும் சென்னை சென்ட்ரல் – பரங்கிமலை மெட்ரோ ரயில் சேவை ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில், பரங்கிமலையில் புதிய ரயில் முனையம் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன்மூலம், மெட்ரோ, புறநகர் மற்றும் பறக்கும் ரயில் பயணிகள் பரங்கிமலையில் இருந்து எளிய முறையில் தங்கள் செல்ல விரும்பும் இடத்திற்கு செல்ல முடியும். இதுகுறித்து ரயில் பயணிகள் கூறுகையில், ‘‘ஆதம்பாக்ககம், நங்கநல்லூர், பழவந்தாங்கல், மடிப்பாக்கம் போன்ற பகுதிகள் வளர்ச்சி அடைந்த பகுதிகளாகும். இந்த பகுதிகளில் வசிப்பவர்கள் பெரும்பாலோர் பரங்கிமலை ரயில் நிலையம் வந்து மின்சார ரயில் மற்றும் மெட்ரோ மூலம் பல்வேறு இடங்களுக்கு பயணிக்கின்றனர். தற்போது, பறக்கும் ரயில் சேவையை இதனுடன் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன்மூலம், ஏராளமான பயணிகள் பயன்பெறுவர். எனவே, இந்த பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்,’’ என்றனர்.

* 3 கட்டங்களாக நிறைவேற்றம்

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், ரயில் போக்குவரத்து சேவையை அதிகரிக்கவும் பறக்கும் ரயில் திட்டம் அமைக்க 1985ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை 3 கட்டங்களாக இத்திட்டத்தை நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக கடற்கரை – மயிலாப்பூர் இடையே 9 கி.மீ. தூரத்துக்கு பறக்கும் ரயில் திட்டப் பணி ரூ.266 கோடியில் மேற்கொள்ளப்பட்டு, கடந்த 1997ல் நிறைவடைந்தது. 2ம் கட்டமாக மயிலாப்பூர் – வேளச்சேரி பறக்கும் ரயில் திட்டப் பணி ரூ.877.59 கோடியில் கடந்த 2007ல் முடிக்கப்பட்டது. இதன் பிறகு, வேளச்சேரி – பரங்கிமலை இடையே 3ம் கட்ட பணி ரூ.495 கோடியில் கடந்த 2008ல் தொடங்கியது. மொத்தம் உள்ள 5 கி.மீ. தூரத்தில் 4.5 கி.மீ. தூரத்துக்கு 167 தூண்களுடன் ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

* ஜூலைக்குள் முடிக்க இலக்கு

வேளச்சேரி – பரங்கிமலை பறக்கும் ரயில் பாதை திட்டத்தில், புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை ஆகிய இடங்களில் ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகள் முடிந்து, ரயில்கள் இயக்க தயாராக உள்ளன. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ஆதம்பாக்கம், தில்லை கங்கா நகர் பகுதிகளில் தூண்கள் அமைத்து, பாலத்தில் கர்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. 500 மீட்டர் தொலைவில் 250 மீட்டர் வரை பணிகள் முடிந்துவிட்டன. மொத்தம் 36 கர்டர்களில் 18 கர்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ரயில் நிலைய பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. மீதமுள்ள பணிகள் வரும் ஜூலைக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை